நம்பிக்கையின் அறிகுறிகளில் ஒன்றாக விளங்குவது முதுமை
மெரினா ராஜ் - வத்திக்கான்
முதியவர்கள் ஒரு கொடை, வரவேற்கப்பட வேண்டிய ஓர் ஆசீர் என்றும், நீண்ட ஆயுள் என்பது ஒரு நேர்மறையான விடயம், அது நம் காலத்தில், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நம்பிக்கையின் அறிகுறிகளில் ஒன்றாக விளங்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 3, வெள்ளியன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில், பொதுமக்கள், குடும்பம் மற்றும் வாழ்க்கைக்கான திருப்பீடத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மேய்ப்புப்பணி பராமரிப்பு குறித்த இரண்டாவது பன்னாட்டு மாநாட்டின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 150 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இறைவாக்கினர் யோவேலின் வரிகளான, “உங்கள் முதியோர் கனவுகளைக் காண்பார்கள்” என்ற கருப்பொளில் சிறப்பிக்கப்படும் இம்மாநாட்டின் உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இவ்வரிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு. மிகவும் பிடித்தமான வரிகள் என்றும், தலைமுறைகளுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்கி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு கொடைகளை வழங்கும் தூய ஆவியாரின் உலகளாவிய வெளிப்பாட்டை இறைவாக்கினர் இவ்வரிகளில் அறிவிக்கிறார் என்றும் கூறினார்.
தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகள் பெரும்பாலும் பிளவுகள் மற்றும் மோதல்களால் குறிக்கப்படுகின்றன, அவை ஒருவருக்கொருவர் எதிராக அமைக்கின்றன என்றும், இவை இருத்தல் குறித்த மிகவும் அவநம்பிக்கையான மற்றும் முரண்பாடான பார்வைகளை வெளிப்படுத்தும் சிந்தனை வழிகளாக இருக்கின்றன என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
முதியவர்களில் தோன்றும் பலவீனம் விண்ணகத்திற்கான ஒரு பாலம்." நமது இருப்பின் அதிசயத்தின் ஒரு பகுதி" என்பதை உணர்ந்து கொள்வது ஆரோக்கியமானது என்றும், மனித பலவீனத்தைக் கண்டு வெட்கப்படுவதற்குப் பதிலாக, நம் சகோதர சகோதரிகளிடமிருந்தும், தனது அனைத்து உயிரினங்களையும் ஒரு தந்தையாகக் காக்கும் கடவுளிடமிருந்தும் உதவி கேட்க நாம் வழிநடத்தப்படுவோம் என்றும் கூறினார்.
முதியவர்கள், “மீட்பு என்பது தன்னிலையில் இல்லை, மாறாக நமது தேவைகளை தாழ்மையுடன் அங்கீகரித்து அவற்றை எவ்வாறு சுதந்திரமாக வெளிப்படுத்துவது என்பதை அறிவதில் உள்ளது" என்று கற்பிக்கிறார்கள் எனவும், "நமது மனிதகுலத்தின் அளவு நாம் எதை அடைய முடியும் என்பதன் மூலம் வழங்கப்படுவதில்லை, மாறாக நம்மை அன்பு செய்யவும், தேவைப்படும்போது உதவவும் அனுமதிக்கும் நமது திறனால் வழங்கப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
வளர்ந்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கை ஒரு முன்னோடியில்லாத வரலாற்று நிகழ்வாகும், இது ஒரு புதிய பகுத்தறிவு மற்றும் புரிதலுக்கு நம்மை அழைக்கிறது என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முதுமை என்பது எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையின் உலகளாவிய இயக்கவியலின் நன்மை பயக்கும் நினைவூட்டல் என்றும் கூறினார்.
முதியவர்கள் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் இடத்தில், அவர்களுக்கு இறைவனின் மென்மையின் நற்செய்தியைக் கொண்டு வந்து, அவர்களுடன் சேர்ந்து, முதியவர்களின் வாழ்க்கையின் பெரும் எதிரியான தனிமையின் இருளைக் கடக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், வீட்டில் நம்பிக்கையுடன் செபிக்கப்படும் ஓர் எளிய பிரார்த்தனை கூட, கடவுளின் மக்களின் நன்மைக்கு பங்களிக்கிறது மற்றும் ஆன்மீக ஒற்றுமையில் நம்மை ஒன்றிணைக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
