தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள்   (ANSA)

அமைதிக்காகத் தொடர்ந்து செபிப்போம் – திருத்தந்தை

ஒவ்வொரு நாளும், நம்பிக்கையான விடாமுயற்சியுடன் அமைதிக்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும், "அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறுபெற்றோர்கள் " - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதிக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்றும், திருச்செபமாலையின் வழியாக அன்னை மரியாவோடு இணைந்து கிறிஸ்து இயேசுவின் மறைபொருளை நாம் தியானிக்கும்போது, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அன்னையர்கள், தந்தையர் மற்றும் முதியவர்களின் துன்பத்தையும் நம்பிக்கையையும் நம்முடையதாக ஆக்குகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 26, ஞாயிறு வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.  

அண்மைய நாள்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மெக்சிகோ மக்களுக்கு தனது மனமார்ந்த உடனிருப்பைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும், அனைவருக்காகவும் தொடர்ந்து செபிப்பதாகவும், இறந்தவர்களின் ஆன்மாக்களை, தூய கன்னி மரியின் பரிந்துரையின் வழியாக இறைவனிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.

இதயப்பூர்வமாக ஆற்றும் நற்செய்திப்பணி, உறுதியான நெருக்கம் மற்றும் ஒற்றுமையின் பல அடையாளச் செயல்கள் செபத்தினால் எழுகின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு நாளும், நம்பிக்கையான விடாமுயற்சியுடன் இந்த உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் அனைவரையும் நோக்கி அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறுபெற்றோர்கள் என்று கூறி வாழ்த்தினார்.

இத்தாலியிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்த திருப்பயணிகள், குறிப்பாக ஸ்பெயினில் உள்ள லோக்ரோனோ, பராகுவேயில் உள்ள புனித பேதுரு, பிரேசிலில் உள்ள ரெக்ரியோ மற்றும் ஐரோப்பாவில் வசிக்கும் கியூபா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

ஜினோசா, ஜெனோவா, கோராடோ, ஃபோர்னோவோ புனித ஜொவான்னி, மிலான் புனித ஜொவான்னி, இலரியோன் மற்றும் போர்டோ லெக்னாகோவைச் சேர்ந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், சிசிலியைச் சேர்ந்த இளைஞர்கள், சலுஸ்ஸோ மறைமாவட்டத்திலிருந்து வந்திருந்த உறுதிப்பூசுதல் பெற இருப்பவர்கள், தங்களது சபை  நிறுவப்பட்ட 150ஆவது ஆண்டினை நினைவுகூறும் திருஇருதயத்தின் ரெபராட்ரிக்ஸ் சகோதரிகள், பாவியாவிலிருந்து வந்த ஒற்றுமை மற்றும் விடுதலைக் குழுவினர், மிலாஸ்ஸோவின் பாலிஃபோனிக் பாடகர் குழுவினர் ஆகிய அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 அக்டோபர் 2025, 18:33