திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ  (ANSA)

இலக்கை நோக்கிப் பார்த்துப் பயணிப்பவர்களாக வாழ்வோம்

வாழ்க்கையின் இறுதி அர்த்தத்தைத் தேடுவதற்கான அடையாளமாக திருப்பயணங்கள் வெளிப்படுத்துகின்றன

மெரினா ராஜ் - வத்திக்கான்

நம்பிக்கையின் எதிர்பார்ப்பு கொண்டவர்களாக, தேவையிலிருக்கும் மக்களுக்கு உதவுபவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும், இலக்கை நோக்கிப் பார்த்துப் பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 23 வியாழனன்று காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் எருசலேம் திருக்கல்லறை சபை சகோதர சகோதரிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், திருக்கல்லறையைப் பாதுகாக்கவும், திருப்பயணிகளைப் பராமரிக்கவும், எருசலேம் ஆலயத்தை காக்கவும் நிறுவப்பட்ட அவர்களது சபையைச் சார்ந்தோருக்குத் தனது வாழ்த்துக்களைக் கூறினார்.

கடவுளுடைய கல்லறையில் எதிர்நோக்கின் நம்பிக்கையை நிறுத்துவது என்பது, எந்த மனித சக்தியாலும் வெல்ல முடியாத, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடவுள் மீதான நமது நம்பிக்கையைப் புதுப்பிப்பது என்றும், ஆணவமும் வன்முறையும் உண்மையை விட மேலோங்கி நிற்கும் உலகில் உண்மைக்கு சாட்சியாக வாழ நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

வன்முறை மோலோங்கி இருக்கும் உலகில், வாழ்க்கை இறப்பை வெல்லும், அன்பு வெறுப்பை வெல்லும், மன்னிப்பு பழிவாங்கு எண்ணத்தை வெல்லும், இரக்கமும் அருளும் பாவத்தை வெல்லும் என்ற உண்மைக்கு சாட்சியாக வாழ வலியுறுத்தினார் திருத்தந்தை.

“பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” என்ற திருத்தூதர் பவுலின் வார்த்த்தைகளுக்கேற்ப இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

வாழ்க்கையின் இறுதி அர்த்தத்தைத் தேடுவதற்கான அடையாளமாக திருப்பயணங்கள் வெளிப்படுத்துகின்றன என்றும், விண்ணகத்தை நோக்கிய ஒரு பயணமாக கடவுளுடன் முழுமையான மற்றும் நிலையான ஒற்றுமை என்ற ஒரே உண்மையான மற்றும் உறுதியான இலக்கை நோக்கிய தொடர்ச்சியாக பயணிக்க எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 அக்டோபர் 2025, 18:34