உலகளாவிய தன்மை, இரக்கத்தின் பரிமாணத்தை எடுத்துரைக்கும் யூபிலி
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருஅவையின் உலகளாவிய தன்மையின் பரிமாணம் மற்றும் இறை இரக்கத்தின் பரிமாணத்தை எடுத்துரைக்கும் வண்ணம் யூபிலி ஆண்டானது இருக்கின்றது என்றும், கிறிஸ்துவின் இதயத்திலிருந்து பாயும் இரக்கத்தின் பரிசைப் பற்றிய தீவிர விழிப்புணர்வைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 20, திங்களன்று உரோமில் உள்ள திருப்பீடப் போர்த்துக்கீசிய கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நற்செய்தி அறிவிப்பு சிறப்பாக வளர்க்கப்படுவதற்காக, அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் ஒரே பாதையில் ஒன்றுபட்டு, ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்க உறுதிபூண்டுள்ளது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
மனித மேம்பாட்டிற்காகவும், கடவுளின் மகிமைக்காகவும், நாம் ஒருவருக்கொருவர் செவிசாய்த்து, ஒவ்வொரு நம்பிக்கையாளர்களிடமும் தூய ஆவியார் தூண்டுவதை மதிக்கும்போது, கிறிஸ்துவின் அரசைக் கட்டியெழுப்புவதில் ஒன்றாகச் செயல்பட்டு, காலத்தின் அடையாளங்களை அதிக தெளிவுடனும் நம்பிக்கையுடனும் நாம் உணர்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இறையியல், மனித மற்றும் சமூக அறிவியல் பற்றிய தங்களது படிப்பை ஆழப்படுத்த உரோமில் அவர்கள் இருப்பது, கேட்கும் கலையில் தங்களை மேலும் மேலும் பயிற்றுவிப்பதைக் குறிக்கிறது என்றும், கடவுளுடைய சீடர்களான நம்மிடையே ஒற்றுமைக்கு இது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இயேசு கிறிஸ்துவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கல்லூரி என்பது இறைஇரக்கத்தின் பள்ளி என்றும், இதில் மாணவர்கள், அன்பான சீடரைப் பின்பற்றுகிறார்கள், கடவுளது அன்பின் துடிப்பைக் கேட்டு, உண்மையான இறையியலாளர்களாக மாறுகிறார்கள் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
ஆயர்கள், மறைமாவட்டங்கள், நாடுகளில் வாழும் மக்கள் அனைவரையும் இறைவனிடம் ஒப்படைத்து செபியுங்கள், இறைவார்த்தையைக் கேட்பதிலும், திருச்சடங்குகளை, குறிப்பாக திருநற்கருணைக் கொண்டாட்டத்திலும் அதற்கு வணக்கம் செலுத்துவதிலும், ஆன்மீக பகுத்தறிவு மற்றும் சகோதரத்துவ இரக்கத்திலும் இயேசுவுடன் நெருக்கமாக இருங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
