தேடுதல்

இத்தாலிய துறவிகள் குழுவினருடன் திருத்தந்தை இத்தாலிய துறவிகள் குழுவினருடன் திருத்தந்தை   (ANSA)

திருஅவையின் சான்றுகளாக வாழ துறவறத்தார் அழைக்கப்படுகின்றனர்

இறைத்தந்தை ஒவ்வொரு யுகத்திலும் வாழும் ஆண்களையும் பெண்களையும் தம்முடைய தூய ஆவியாரின் ஒளியிலும், தம்முடைய ஒரே பேறான மகனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையிலும் தம்மை வணங்கும்படி தேடி அழைக்கிறார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

துறவறத்தார் ஒவ்வொருவரும் முன்மாதிரியான வழியில் வாழவும், தியான வாழ்க்கையின் அழகிற்கு திருஅவையின் சான்றுகளாக இருக்கவும் அழைக்கப்படுகின்றார்கள் என்றும், உலக வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல மாறாக, இதயத்தின் மறுபிறப்பாகிய இந்த அழைப்பில் செவிசாய்க்கும் திறன் கொண்டவர்களாக வாழ அழைக்கப்படுகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 11, சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் துறவறத்தாருக்கான யூபிலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இத்தாலியத் துறவிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், “உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். என்ற யோவான் நற்செய்தியின் இறைவார்த்தைகளைக் குறித்து எடுத்துரைத்தார்.

இறைத்தந்தை ஒவ்வொரு யுகத்திலும் ஆண்களையும் பெண்களையும் தம்முடைய தூய ஆவியாரின் ஒளியிலும், தம்முடைய ஒரே பேறான மகனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையிலும் தம்மை வணங்கும்படி தேடி அழைக்கிறார் என்றும், பெண்களையும் ஆண்களையும் தம்மிடம் முழுமையாக அர்ப்பணிக்கவும், அவரைத் தேடவும், அவருக்குச் செவிசாய்க்கவும், அவரைப் புகழவும், இரவும் பகலும், தங்கள் இதயங்களின் மறைவில் அவரை அழைக்கவும் அழைக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் பெருகிய முறையில் அந்நியப்படுத்தப்பட்ட உலகில், தன்னுடன், அண்டை வீட்டாருடன், படைப்புகளுடன், கடவுளுடன் தொடர்பில் வாழ, உள்ளகத்தன்மை மற்றும் அமைதிக்கான இந்த அழைப்பு, இன்று முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படுகிறது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இறைவனுடனான நெருங்கிய நட்பிலிருந்து, வாழ்வின் மகிழ்ச்சி, நம்பிக்கையின் அற்புதம், திருஅவையின் ஒற்றுமைக்கான சுவை ஆகியவை மீண்டும் பிறக்கின்றன என்றும், உங்கள் தூரம் உலகத்திலிருந்து உங்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்காது, மாறாக ஒரு ஆழமான ஒற்றுமையில் உங்களை ஒன்றிணைக்கிறது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

“ஒரு துறவி என்பது, அனைவரிடமிருந்தும் பிரிக்கப்பட்டு, அனைவருடனும் ஒன்றிணைந்தவர்” என்ற எவாக்ரியஸ் பொன்டிகஸ் அவர்களின் வரிகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், செபம் நிறைந்த தனிமை அனைத்து மனிதகுலத்திற்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒற்றுமையையும் இரக்கத்தையும் உருவாக்குகிறது என்றும், செபத்தால் திருஅவை மற்றும் சமூக சூழலில் தெய்வீக வாழ்வின் புளிக்காரமாக மாற்றப்படுகின்றோம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 அக்டோபர் 2025, 12:32