புனித மரிய துரொன்காத்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
இத்தாலியரான மரிய துரோன்காத்தி, ஈக்வடாரில் ஒரு மறைப்பணியாளராகப் பணியாற்றினார். அவர் 1883 பிப்ரவரி 16, அன்று கோர்டெனோ கோல்கியில் (BS) பிறந்தார். அவரது தொடக்கப் பள்ளி ஆசிரியர் புனித தொன்போஸ்கோவால் நிறுவப்பட்ட சலேசியன் பத்திரிகையைப் படிக்கக் கொடுத்த பிறகு, குழந்தை பருவத்திலிருந்தே அவர் சலேசியன் மறைப்பணிகளில் ஆர்வம் காட்டினார். நிஸ்ஸா மான்ஃபெராடோவில் (AT) உள்ள இல்லத்தில் தனது ஆரம்ப துறவறப் பயிற்சியைப் பெற்றார், மேலும் 1914 செப்டம்பர் 19, அன்று தனது நிரந்தர வார்த்தைப்பாடுகளை ஏற்றார். 1922ஆம் ஆண்டு வசந்த காலத்தில், ஈக்வடார் பணிமாற்றம் செய்யப்பட்டார். சுஞ்சிக்கு வந்த அவர், போடிக்வின் என்ற சிறிய மருத்துவமனையை அமைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அமேசான் மழைக்காடுகளுக்குச் சென்றார். மக்காஸ், செவில்லா தொன்போஸ்கோ மற்றும் சுகுவா ஆகியோருக்கு ஒரு முன்னோடியாக, செவிலியர் மற்றும் மறைக்கல்வியாளார், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஆலோசகர் என அனைவருக்கும் தாயாக விளங்கினார்.
குடியேறிகளுக்கும் ஷுவருக்கும் இடையிலான மோதலால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டார்: 1938 இல் மக்காஸில் உள்ள மறைப்பணி தீயில் சிக்கியது, 1969 இல் சுகுவாவில் உள்ள மறைப்பணியானது தீப்பிழம்புகளால் அழிக்கப்பட்டது. அந்த காலங்களில் சகோதரி மரியா "கடவுளின் விருப்பத்தை நன்றாகச் செய்வோம்! அவர் இதை அனுமதித்தார், அவர் நமக்கு உதவுவார்." என்று கூறுவார். அடிக்கடி பெரியம்மை மற்றும் தட்டம்மை தொற்றுநோய்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். 1954 இல், சுகுவா மருத்துவமனை புதிய வளாகங்களில் செயல்படத் தொடங்கியது, அதன் இயக்குநராக செயல்பட்ட மரியா, அந்த நிலங்களில் வசிப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, செவிலியர்களைப் பயிற்றுவிப்பதற்கான படிப்புகள் மற்றும் இளம் பெண்களின் கல்வி போன்ற விளம்பர முயற்சிகளை ஏற்பாடு செய்தார்.
சிரமங்கள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் ஒரு வலுவான நம்பிக்கை அவரைத் தாங்கியது: "சிலுவையில் உள்ள இயேசுவின் பார்வை எனக்கு வாழ்க்கையையும் வேலை செய்ய துணிவையும் தருகிறது" என்று கூறுவார். ஆகஸ்ட் 25, 1969 அன்று, அவர் ஆன்மீக பயிற்சிகளுக்காகப் புறப்பட்டபோது, சுகுவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சிறிய விமானம், ஓடுபாதைக்கு அருகில் விபத்துக்குள்ளாகி இறந்தார். ஷீவருக்கும் குடியேறிகளுக்கும் இடையில் சமரசத்திற்கான அவரது முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. 2012 நவம்பர் 24, அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அவர் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
