தேடுதல்

CELAM உறுப்பினர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ CELAM உறுப்பினர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ  (@Vatican Media)

அன்பின் சுடரில் ஒரே குடும்பமாக ஒன்றிணைவோம்

யூபிலி ஆண்டு, எதிர்நோக்கு மற்றும் குடும்பம் என்னும் தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மெரினா ராஜ் - வத்திக்கான்

யூபிலி ஆண்டில் இருக்கும் நாம் அனைவரும் திருத்தூதர் பேதுருவின் இல்லமும் திருஅவையின் இல்லமுமாக இருக்கும் ஆலயத்தில் ஒரு பெரிய குடும்பமாக நம்மை நாமே உணர வேண்டும் என்றும், அவரது அன்பின் சுடரில் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் குடும்பத்தின் எதிர்காலம் குறித்து CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் ஆயர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட யூபிலி ஆண்டுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்கள், திருப்பீட வாழ்வுக் கழகம் மற்றும் இரண்டாம் ஜான் பால் இறையியல் நிறுவனத்தைச் சார்ந்தவர்களைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

எதிர்கால குடும்பம் என்ற கருப்பொருளில் சிந்தித்து உரையாடல் மேற்கொண்ட அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிகமாக வலியுறுத்திய கருத்துக்களான யூபிலி ஆண்டு, எதிர்நோக்கு மற்றும் குடும்பம் என்னும் தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பழைய ஏற்பாட்டில், யூபிலி ஆண்டு திரும்புதலைத் தூண்டியது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தங்களது சொந்த நிலத்திற்குத் திரும்புதல், விடுதலை பெற்ற மனிதர்களின் உண்மையான மனநிலைக்குத் திரும்புதல், கடவுளின் நீதி மற்றும் இரக்கத்தின் தோற்றத்திற்குத் திரும்புதல் போன்றவற்றை நம் வாழ்க்கையின் மையமாகிய கடவுளாம் இயேசு கிறிஸ்துவிடம் திரும்புவதற்கான ஓர் அழைப்பாக நாம் கருத வேண்டும் என்றும் கூறினார்.

புறம்பாக, தூரமாக இருப்பது என்பது பொருளாதார நிலையில் வறுமையாக இருப்பதோ அல்லது சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு இருப்பதோ அல்ல. மாறாக, கடவுளிடமிருந்து பிரிந்து இருத்தலே என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இந்த இடைவெளி பாவத்தின் அடையாளம். இது துன்பம், வன்முறை, அலட்சியம், மிகவும் பலவீனமானவற்றை நிராகரித்தல் போன்ற ஏனைய புறம்பான பகுதிகளைப் போற்றிப் பராமரிக்கிறது என்றும் கூறினார்.

எதிர்நோக்கின் யூபிலி  ஆண்டானது இந்த புறம்பான பகுதிகளை விட்டுவிட்டு நமது அடிப்படை வேர்களாகிய, நமது பெற்றோரிடமிருந்து பெற்ற நம்பிக்கை, செபமாலை செபித்த நமது பாட்டிகளின் விடாமுயற்சியான செபம் போன்ற நமது வேர்களுக்குத் திரும்ப நம்மை அழைக்கிறது என்றும், அவர்களின் எளிய, பணிவான மற்றும் நேர்மையான வாழ்க்கை புளிக்காரம் போன்று பல குடும்பங்களையும் சமூகங்களையும் ஆதரிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவே வழி, உண்மை மற்றும் வாழ்வு என்பதை நாம் கற்றுக்கொண்டோம், அவரில் நாம் நமது உண்மையான மகிழ்ச்சியைக் காண்கிறோம்: நாம் வீட்டில், நாம் சேர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிவதில் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

எதிர்நோக்கின் யூபிலி கடவுளே என்ற உண்மையை சந்திப்பதற்கான ஒரு பயணமாக இவ்வாண்டு அமைகின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசு தனது பணியின் தொடக்கத்தில், இந்த யூபிலியை அருளின் ஆண்டாக விவரித்து, உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர் தனது சீடர்களை "கலிலேயாவுக்குத் திரும்ப" அழைக்கிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

உயிர்த்தெழுந்த இயேசுவைச் சந்தித்தபோது சீடர்களை நிரப்பிய, பூமியெங்கும் அவரது பெயரை அறிவிக்க வழிவகுத்த அந்த நிரம்பி வழியும் மகிழ்ச்சிக்கான அழைப்பாக நமது வாழ்வின் பிரதிபலிப்பு இருக்க வேண்டும் என்றும், "நற்செய்தியின் மகிழ்ச்சி பூமியின் எல்லைகளை அடையவும், எந்த சுற்றுப்புறமும் அதன் ஒளியை இழக்காமல் இருக்கவும் எதிர்நோக்கின் அமைதியான பாடலாக நமது குடும்பங்கள் இருக்கட்டும் என்றும் வாழ்த்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 செப்டம்பர் 2025, 15:31