இளையோர் மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்குத் திருத்தந்தையின் செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பன்னாட்டு இளையோர் மாநாட்டில் பங்கேற்கும் இளையோர் மேற்கொள்ளும் திருப்பயணங்கள் மற்றும் உடன் பிறந்த உணர்வுடனான சந்திப்புக்கள் அனைத்தும் நமக்காக பாடுகள் பட்டு இறந்து உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 12, சனிக்கிழமை முதல் 20 ஞாயிற்றுக்கிழமை வரை உரோமில் நடைபெற உள்ள UNIV பன்னாட்டு இளையோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யூபிலி ஆண்டு 2025, தூய Josemaría Escrivá அவர்களின் குருத்துவ ஆண்டின் நூற்றாண்டு என்னும் இருபெரும் விழாக்களை முன்னிட்டு உரோமில் ஒன்று கூடியிருக்கும் இளையோர் அனைவரும் செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை, அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் பெறும் மனவுறுதி கொண்டு வாழ வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற, மாட்சிமைக்கு வழிவகுக்கின்ற, அன்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட, ஏமாறாத நம்பிக்கையின் அறிவிப்பாளர்களாக இளையோர் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அனைவருக்கும் கொண்டு வரவும், இளையோர் ஒவ்வொருவரும் தூண்டப்படவும் இறைவனிடம் செபிப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், கன்னி மரியாவிடம் அனைவரையும் ஒப்படைத்து செபிப்பதாகவும் குறிப்பிட்டு தனக்காக செபிக்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
1968 ஆம் ஆண்டு தூய Josemaría Escrivá என்பவரின் முயற்சியால் பிறந்த இளம் பல்கலைக்கழக மாணவர்களின் பன்னாட்டுக் கூட்டமே UNIV என்பதாகும். ஐந்து கண்டங்களைச் சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு வாரம் ஒன்று கூடி தங்களது கருத்துக்களை இம்மாநாட்டின்போது பகிர்ந்துகொள்வர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்