குருத்து ஞாயிறு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 40,000 இறைமக்களுக்கு குருத்து ஞாயிறு வாழ்த்துக்களையும், புனித வார வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் புனித வாரத்தின் முதல் நாளாகிய குருத்துஞாயிறு திருவழிபாட்டில் பங்கேற்ற மக்களை வாழ்த்துவதற்காக, திருப்பலி நிறைவில் பீடத்தை வந்தடைந்து, இறைமக்களை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த சில மாதங்களாக மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி, ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் வத்திக்கான் வளாகத்தில், கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவரான கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் தலைமையேற்று வழிநடத்திய குருத்து ஞாயிறு திருவழிபாட்டுத் திருப்பலியின் நிறைவில் மக்களைச் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை.
ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்வுக்கான யூபிலியானது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றதை முன்னிட்டு திருப்பயணிகளை வாழ்த்துவதற்காகவும் நன்றி கூறுவதற்காகவும் திருப்பலி நிறைவில் வத்திக்கான் வளாகம் வந்தது போல் இம்முறையும் மக்களுக்கு புனித வார வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 23, ஞாயிறு உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்து வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 6, ஞாயிறு திருப்பலி நிறைவிலும், ஏப்ரல் 6, வியாழன் மாலை வத்திக்கான் பேதுரு பெருங்கோவிலுக்குள் சென்று செபித்த போதும், திருப்பயணிகளை வாழ்த்தினார். இம்முறை இரண்டாவது முறையாக வத்திக்கான் வளாகத்தில் இறைமக்களைச் சந்தித்து அனைவருக்கும் குருத்து ஞாயிறு மற்றும் புனித வார வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை.
ஏப்ரல் 12, சனிக்கிழமை மாலை மேரி மேஜர் பேராலயம் சென்று, உரோம் நகர் பாதுகாவலியான Salus Populi Romani அன்னை மரியா திரு உருவப்படத்தின் முன் சிறிது நேரத்தினை செபத்திற்காக அர்ப்பணித்தார் திருத்தந்தை.
ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் இறைமக்களைச் சந்தித்து ஏறக்குறைய 10 நிமிடங்கள் இருந்த திருத்தந்தை அவர்கள், அதன் பின் தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் சென்று திருத்தூதர் பேதுருவின் கல்லறை, தூய பத்தாம் பயஸ் கல்லறை மற்றும், திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் நினைவுச்சின்னம் ஆகியவற்றை சந்தித்து செபித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்