ஓய்விலிருக்கும் திருத்தந்தை மீண்டுமொருமுறை மக்களைச் சந்தித்தார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபின் வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் ஒய்வெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 10 வியாழக்கிழமையன்று புனித பேதுரு பெருங்கோவில் சென்று அங்குள்ள புனித பத்தாம் பயஸ் கல்லறையின் முன் சிறிது நேரம் செபித்தார்.
கடந்த ஞாயிறன்று ஏறக்குறைய 20 ஆயிரம் மக்கள் கூடியிருந்த புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திற்கு வந்து விசுவாசிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது வியாழனன்று பெருங்கோவிலுக்குள் நுழைந்து திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்களின் கல்லறை முன் சிறிது நேரம் செபித்தார்.
புனித திருத்தந்தை பத்தாம் பயஸுடன் தன் ஆன்மீகப் பிணைப்பை எப்போதும் வெளிப்படுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஞாயிறன்று புனித பத்தாம் பயஸின் கல்லறையைத் தரிசித்ததுபோல், வியாழனன்றும் தரிசித்து கல்லறை முன் சிறிது நேரம் செபித்தார்.
சிறிது நேரமே அங்கிருந்தாலும், திருத்தந்தையின் வருகை குறித்து அறிந்த திருப்பயணிகள், மற்றும் பெருங்கோவிலுனுள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் என பலர் திருத்தந்தைக்கு அருகில் வந்திருந்து அவரை வாழ்த்தினர். குழந்தைகளும் அவரின் அருகில் வந்திருந்து அவரின் ஆசி பெற்றுச் சென்றனர்.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த திருத்தந்தை அவர்கள், மக்களுடன் எவ்வித வார்த்தைகளையும் பரிமாறிக் கொள்ளவில்லை எனினும் தன் சைகைகள் வழியாக தன் அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்