பாடுகளின் பாதையில் பயணித்த முதல் மனிதர் சீரேன் ஊர் சீமோன்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயேசுவின் சிலுவையைச் சுமந்ததன் வழியாக, சீரேன் ஊரானாகிய சீமோன் இயேசுவின் பாடுகளில் பங்கேற்ற முதல் மனிதர் என்ற நிலையை அடைகின்றார் என்றும், சீமோன் சுமந்த சிலுவையானது, இயேசு நமக்காக, நம்முடைய பாவங்களுக்காக சுமந்த சிலுவை என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற குருத்துஞாயிறு திருவழிபாட்டிற்குத் தலைமையேற்று திருத்தந்தையின் மறையுரையை வாசித்தளித்தார் கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவரான கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி.
“ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!” (லூக்கா 19:38) என்ற வெற்றி ஆரவாரத்துடன் மெசியாவாகிய இயேசுவை அழைத்துக்கொண்டு எருசலேமிற்குள் நுழைந்த மக்கள், சிறிது நாள்களிலேயே அவரை சிலுவையில் அறையத் தீர்ப்பிடுகின்றனர் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், குருத்தோலைகள் ஏந்தி இயேசுவைப் போற்றிப் புகழ்ந்து அவரைப் பின்பற்றிய நாம், அவரது துயரம், மரணம், இறப்பு போன்றவற்றை வலியுறுத்தும் பாடுகளின் வாரத்தைத் துவக்குகின்றோம் என்றும் மொழிந்துள்ளார்.
சீரேன் ஊர் சீமோன்
இயேசுவின் பாடுகளின் பாதையில் ஏராளமான மக்கள் இருந்தாலும் வயல்வெளியில் இருந்து திரும்பிய சீரேன் ஊரானாகிய சீமோன் இயேசுவின் பாரமான சிலுவையை சுமக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், சீமோனின் செயல்களையும் அவரது இதயத்தையும், அவரது பாதையையும் நாம் சிந்திக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இயேசுவை இறுதி வரைப் பின்பற்றுவேன் என்று வாக்குறுதி அளித்த சீமோன் பேதுரு இயேசுவின் பாடுகளின் பாதையில் அவருடன் பயணிக்கவில்லை, மாறாக இயேசுவைப் பின்பற்றுவேன் என்று உறுதியளிக்காதவரும், இதுவரை அவரது சீடராக இல்லாதவருமான சீரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவையை சுமக்கின்றார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
வார்த்தைகளால் சொல்லிவிட்டு அதனை செயலில் எடுத்துரைக்காமல் இருக்கும் மனிதர்கள் மத்தியில், சீமோன் வார்த்தைகளால் அல்ல, மாறாக தனது செயல்களால் இயேசுவைப் பின்பற்றுபவர் என்று எடுத்துரைக்கின்றார் என்றும், கட்டாயத்தினால் இயேசுவிற்கு உதவ முன்வந்தாலும் அவரது பாடுகளில் பங்கேற்கும் முதல் மனிதர் என்ற பேற்றினைப் பெறுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இயேசுவைப் பின்தொடர்பவர்
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (லூக் 9:23) என்று இயேசு வலியுறுத்தியக் கருத்துக்களை வாழ்வாக்கியவர் சீரேன் ஊர் சீமோன் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், இயேசுவிற்கும் சீமோனுக்கும் இடையில் எந்தவிதமான உரையாடலும் இல்லை, மாறாக பாரமான சிலுவையே இருந்தது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இயேசு எல்லாச் சூழலிலும் நம்மைச் சந்திக்க வருகின்றார் என்பதை சீரேன் ஊர் சீமோனின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், வெறுப்பு, வன்முறை போன்றவற்றால் ஏராளமான ஆண்களும் பெண்களும் பாதிக்கப்படும் கல்வாரிப் பாதையை இயேசு தனது வாழ்வைக் கையளித்து, மீட்பின் பாதையாக மாற்றுகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இன்றும் பல ஆயிரக் கணக்கான சீரேன் ஊர் சீமோன்கள், துன்புறும் இயேசுக்களாகிய மக்களின் துயரச் சிலுவைகளை சுமக்க முன்வருகின்றனர் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், இயேசுவின் பாடுகளின் பாதையானது, இயலாதவர்களுக்கு உதவும் இரக்கத்தின் பாதையைச் சுட்டிக்காட்டுகின்றது என்றும், இந்த பாடுகளின் வாரத்தில் இயேசுவின் சிலுவையை கழுத்தில் அல்ல, மாறாக, நம் இதயத்தில் நாம் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
நமது சிலுவைகளை மட்டுமல்ல, நமக்கு அருகில் துன்புறும் பிறரது சிலுவைகளை சுமக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும், ஒருவர் மற்றவர்களுக்கு உதவும் சீரேன் ஊர் சீமோன்களாக நாம் மாற, இவ்வுயிர்ப்பின் காலத்தில் நம்மையே நாம் தயார்படுத்துவோம் என்றும் வலியுறுத்தி தனது மறையுரைக் கருத்துக்களை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்