இறைத்தந்தையின் இரக்கமுள்ள அரவணைப்பில் வாழ்பவர்களாக.....
மெரினா ராஜ் - வத்திக்கான்
உடலளவிலும், மனதளவிலும் நமக்கு பல துன்ப துயரங்கள் இருந்தாலும், விரக்தி மனநிலைக்குச் செல்லாமல், மனக்கசப்பில் நம்மை மூடிக்கொள்ளாமல், இயேசுவைப் போல, இறைத்தந்தையின் தெய்வீக மற்றும் இரக்கமுள்ள அரவணைப்பினால் பாதுகாக்கப்படுபவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 13, குருத்து ஞாயிறை முன்னிட்டு இயேசுவின் பாடுகள் பற்றியக் கருத்துக்களை வலியுறுத்தி திருப்பயணிகளுக்கு வழங்கிய எழுத்துப் படிவ மூவேளை செப உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” (லூக் 22:42), “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (23:34); “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (23:46) என்று இயேசு கூறும் வார்த்தைகள் அவர், உதவியற்றவராக, தாழ்ச்சியுள்ளவராக இருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இயேசுவின் மனநிலை
தனது தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவருடன் பயணிக்கும் குழந்தையின் உணர்வுடனும் இதயத்துடனும் இயேசு சிலுவையை நோக்கிப் பயணிக்கின்றார் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், உடலளவில் வலிமையற்றவராக, கைவிடப்பட்டவராக இருந்த இயேசு, கடவுளின் கையில் தன்னை ஒப்படைக்கும் இறுதிநிலை வரை இறைத்தந்தையை இறுகப் பற்றிக்கொண்டு வாழ்பவராக இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய இயேசுவின் உணர்வோடு நாம் சிந்திக்கவும், அவருடைய உணர்வுகளை நம்முடையதாக மாற்றவும், இன்றைய திருவழிபாட்டு நிகழ்வுகள் நம்மை அழைக்கின்றன என்று தெளிவுபடுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், உடலளவில், மனதளவில் நமக்கு பல துன்ப துயரங்கள் இருந்தாலும், விரக்தி மனநிலைக்குச் செல்லாமல், மனக்கசப்பில் நம்மை மூடிக்கொள்ளாமல், இயேசுவைப் போல, இறைத்தந்தையின் தெய்வீக மற்றும் இரக்கமுள்ள அரவணைப்பினால் நாம் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு உதவுகின்றன என்றும் கூறியுள்ளார்.
அனைவருக்கும் நன்றி
திருத்தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண இறைமக்கள் அனைவரும் ஏறெடுக்கும் செபங்களின் வல்லமையானது கடவுளின் நெருக்கம் இரக்கம் மற்றும் மென்மையை எடுத்துரைக்கின்றது. எனவே அனைவருடைய செபத்திற்கும் நன்றி என்று மொழிந்துள்ள திருத்தந்தை அவர்கள், இறைமக்கள் அனைவருக்காக தானும் செபிப்பதாகவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
துன்புறும் மக்கள் அனைவரையும் குறிப்பாக போர், வறுமை மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அனைவரையும் இறைவனிடம் ஒப்படைத்து செபிக்கும்படிக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை அவர்கள், சாந்தோ தொமிங்கோவில் இரவு விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இறைவன் ஆறுதல் அளிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
சூடான் போரின் இரண்டாம் ஆண்டு
ஏப்ரல் 15, செவ்வாயன்று நினைவுகூரப்படும் சூடானில் போர் துவங்கியதன் இரண்டாவது ஆண்டானது, பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும் இலட்சக் கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் துயரமான நிலையை எடுத்துரைக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், துன்புறும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து மக்களின் கூக்குரலும் விண்ணை நோக்கி எழும்புகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.
போரினைத் தவிர்த்து உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று பன்னாட்டுச் சமூகத்திற்கு வலியுறுத்துவதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்படும் லெபனோன் நாட்டு மக்கள் அனைவரும், கடவுளின் உதவியுடன் அமைதியிலும் செழிப்பிலும் வாழட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கான விண்ணப்பம்
துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், காங்கோ ஜனநாயக குடியரசு, மியான்மார், தென்சூடான் ஆகிய நாடுகளில் வாழும் மக்களுக்கு அமைதி கிடைக்கப்பெற செபிப்போம் என்றும், வியாகுல மரியா, இந்த அருளை நமக்காகப் பெற்று, புனித வாரத்தை நம்பிக்கையுடன் வாழ உதவுவாராக என்று குறிப்பிட்டு தனது மூவேளை செப உரையினை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்