உக்ரைன் மக்களின் கண்களில் அன்பும் நம்பிக்கையும் வெளிப்படுகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனுக்குப் பத்தாவது முறையாகச் சென்றிருக்கும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள், அந்நாட்டு மக்களின் கண்களில் அன்பும் நம்பிக்கையும் வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது சிகிச்சைக்குப் பிறகு உரோமை ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்து தனது இல்லம் திரும்பிய நிலையில், தன்னை தொலைபேசியில் அழைத்து உக்ரைன் நாட்டு மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டு அறிந்ததாகவும் தெரிவித்தார் கர்தினால் Krajewski
உக்ரைனின் Zaporizhzhia-வில் உணவு உதவிகளை விநியோகித்துக் கொண்டிருந்தபோது, திருத்தந்தையிடமிருந்து வியப்பூட்டும் வகையில் ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றதாகவும், இந்த உரையாடலின்போது, உக்ரைனில் தனது பணிகள் குறித்து விசாரித்து அவரது ஆசீரைத் தனக்கு வழங்கியதாகவும் கூறினார் கர்தினால்.
மேலும் இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, உக்ரைனில் நிலவும் கடும்குளிரைக் குறித்துக் குறிப்பிட்டதாகவும், அப்போது, "அச்சூழலை எப்படிக் கையாள்வது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று நகைச்சுவை உணர்வுடன் திருத்தந்தை கூறியதாகவும், இது தனக்கும் தன்னோடு இருந்தவர்களுக்கும் பெரும் உற்சாகத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார் கர்தினால்.
தனது இந்த வருகையின் போது, உணவு உதவிக்காக குளிரில் மணிக்கணக்கில் காத்திருந்த உள்ளூர் மக்களின் துயரங்களைக் கண்டதாகவும், அந்நிலையிலும் கூட, அவர்கள் தங்களின் நம்பிக்கையையும் நன்றியையும் வெளிப்படுத்தியதாகவும் விவரித்தார் கர்தினால் Krajewski.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மக்களுக்கு நன்கொடையாக அளித்த நான்கு இயங்கு மருத்துவ ஊர்திகளையும் (ambulance) Zaporizhzhia-விலுள்ள உள்ளூர் நலப்பணி அதிகாரிகளிடம் வழங்கியதாகவும் கூறினார் கர்தினால் Krajewski.
கூடுதலாக, நேபிள்ஸில் உள்ள மருந்தகங்கள் மற்றும் வத்திக்கான் மருந்தகம் மற்றும் ஜெமெல்லி மருத்துவமனையின் நன்கொடைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு உக்ரைனுக்கு ஏறக்குறைய 2,00,000 யூரோக்கள் மதிப்புள்ள மருந்துகளைச் சேகரிக்க உதவியது என்பது குறிப்பிட்டுக் காட்டியுள்ளார் கர்தினால் Krajewski
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்