இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அரசி கமிலா திருத்தந்தையுடன் சந்திப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அரசி கமிலாவின் 20-ஆம் திருமண ஆண்டு விழா மற்றும் இளவரசர் பிலிப்பின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர்களைத் தனது சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினார் என்று தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சிகிச்சைக்குப் பிறகு உரோமை ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்து திரும்பிய நிலையில், ஏப்ரல் 09, இப்புதன் நண்பகலில் அவர்களின் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்று கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
இந்த மூன்று நாள் உரோமைப் பயணத்தின் போது, மன்னரும் இளவரசியும் இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா, பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரையும் சந்தித்தனர் என்றும், மேலும் மன்னர் சார்லஸ் இத்தாலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் பிரித்தானிய மன்னர் ஆனார் என்றும் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பயணம், மன்னர் சார்லஸ் அவர்களின் மதங்களுக்கு இடையேயான மற்றும் அனைத்துலக உறவுகளுக்கான தொடர்ச்சியான ஈடுபாட்டையும், இங்கிலாந்து தலத்திருஅவையின் உச்ச ஆளுநராக அவரது பங்கையும் பிரதிபலிக்கிறது என்றும் உரைக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்