இந்திய அருள்கன்னிகை உட்பட 6 பேர் புனிதர் பட்ட படிகளுக்கு ஏற்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்திய அருள்சகோதரி ஒருவர் உட்பட, 6 இறையடியார்களின் பெயர்களை புனிதர் பட்ட நிலைகளுக்கான படிகளுக்கென அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதர்பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள் திங்களன்று திருத்தந்தையை சந்தித்து இது குறித்த விவரங்களை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, ஆறு இறையடியார்களின் புனிதர்பட்ட நிலைகளுக்கான படிநிலைகளைத் தொடர அங்கீகாரம் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இறையடியார் Eliswa அவர்கள், 1831ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள Ochanthuruth என்னுமிடத்தில் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்து, தன் 16ஆம் வயதிலேயே Vatharu Vakayil என்பவரை திருமணம் புரிந்து 1851ஆம் ஆண்டு ஒரு மகளைப் பெற்றபின், அதற்கு அடுத்த ஆண்டே தன் கணவரை இழந்து விதவையானார்.
ஜெப வாழ்விலும் தனிமை வாழ்விலும் தன் நாட்களைச் செலவிட்ட இவர், இத்தாலி நாட்டு காலணிகள் அணியாத கார்மல் சபை அருள்பணி லியோபோல்தோ பெக்காரோ என்பவரின் ஆன்மீக வழிகாட்டுதலின்படி, கார்மல் சபையின் காலணி அணியாத பெண்களுக்கான மூன்றாம் சபை என்பதை 1862ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.
இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து 1913ஆம் ஆண்டு இறைவனடிச் சேர்ந்த இறையடியார் எலிஸ்வா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு இவரை அருளாளராக உயர்த்துவதற்கு வழிகோலியுள்ளது.
பிரேசில் நாட்டின் ஸாவோ பௌலோ நகரில் போதைப்பொருள் கடத்துவோருக்கு எதிராகப் பணியாற்றியதற்காக அவர்களால் 2001ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இத்தாலிய அருள்பணி Nazareno Lanciotti அவர்களின் மறைசாட்சிய மரணத்தையும் அருளாளர் பட்ட அறிவிப்புக்கென ஏற்று அங்கீகாரம் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1852ஆம் ஆண்டு பிறந்த இஸ்பானிய கட்டிடக் கலைஞர் அந்தோனி கௌதி, பர்சலோனாவின் புகழ்வாய்ந்த திருக்குடும்ப பேராலயத்தைக் கட்டும் பணியை எடுத்து நடத்தியவர்.
1926ஆம் ஆண்டு சாலை விபத்தில் காயமுற்ற இவர், மருத்துவமனையில் இறுதி அருள்சாதனத்தைப் பெற்றபின், விபத்து நடந்த மூன்றாம் நாள் இறைபதம் சேர்ந்தார். புனிதர் பட்ட நிலைகளுக்கான ஆரம்ப படியான வணக்கத்துக்குரியவராக ஏற்கப்பட்டுள்ளார் இறையடியார் அந்தோனி கௌதி.
இது தவிர, கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கென பெண்துறவு சபை ஒன்றை உருவாக்கிய பெல்ஜியம் நாட்டின் அருள்பணி Peter Joseph Triest, இத்தாலியில் இளையோரிடையே பணியாற்றிய இத்தாலிய அருள்பணி Angelo Bughetti, இத்தாலியில் பிறந்து இளையோரை மறைக்கல்வி ஆசிரியர்களாக உருவாக்குவதில் ஆழ்ந்த கவனம் செலுத்திய அருள்பணி Agostino Cozzolino ஆகியோரும் வணக்கத்துக்குரியவர்களாக ஏற்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்