திருத்தந்தையின் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் தொடர்முன்னேற்றம் இருப்பதாகவும், சுவாசம், இயக்கம் மற்றும் குரல் தொடர்பான நலமடைதலில் படிப்படியான முன்னேற்றங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது திருப்பீடத்தகவல் தொடர்புத்துறை.
ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள திருப்பீடத்தகவல் தொடர்புத் துறையானது, அண்மையில் எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனை தரமதிப்பீடுகள், திருத்தந்தையின் உடல் நிலையில் படிப்படியான முன்னேற்றங்கள் இருப்பதை எடுத்துரைக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.
செயற்கை ஆக்சிஜனேற்ற சிகிச்சை முறையைக் கடந்த சில நாள்களாக திருத்தந்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும், உயர் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை முறையானது அத்தியாவசியமாகத் தேவைப்படும்போது மட்டும் மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சாந்தா மார்த்தா இல்லத்தில் வைத்து
திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் Edgar Peña Parra, பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர், பேராயர் Luciano Russo, உரோமன் கூரியாவின் மேலதிகாரிகள் திருப்பீடத்துறைகளின் தலைவர்கள் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித வாரத் திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்றும், ஏப்ரல் 13, குருத்து ஞாயிறு திருப்பலியினை, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவரான கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் தலைமையேற்று வழிநடத்த உள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 15, புனித செவ்வாய் அன்று, திருத்தந்தையின் உடல்நிலை குறித்த மற்றொரு அறிக்கை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது திருப்பீடத்தகவல் தொடர்புத்துறை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்