கோழிக்கோடு உயர் மறைமாவட்ட முதல் பேராயராக வர்க்கீஸ் சக்கலக்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மறைமாவட்டத்தை பெருநகர உயர்மறைமாவட்டமாக உயர்த்தி, அவ்வுயர் மறைமாவட்டத்தின் முதல் பேராயராக வர்க்கீஸ் சக்கலக்கள் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 12, சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி வெரபோலி உயர்மறைமாவட்டத்தின் கீழ் இதுவரை இருந்த கண்ணூர் மற்றும் சுல்தான்பேட் மறைமாவட்டங்களை கோழிக்கோடுடன் இணைத்து அதனை பெருநகர உயர்மறைமாவட்டமாக அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இந்தியாவின் தும்கா மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக Sonatan Kisku அவர்களையும், சிம்லா மற்றும் சண்டிகார் மறைமாவட்டத்திற்கு ஆயராக தமிழகத்தைச் சார்ந்த Sahaya Thatheus Thomas அவர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை.
ஆயர் சகாய ததேயுஸ் தாமஸ்
புதிய ஆயர் சகாய ததேயுஸ் தாமஸ் அவர்கள் 1971 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் நாள் தமிழ்நாட்டின் கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள சின்னவிளையில் பிறந்தவர். லக்னோவில் உள்ள புனித பவுல் இளம் குருமடத்தில் கல்வி பயின்ற இவர், ஜலந்தூரில் உள்ள தமத்திரித்துவ குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றார். ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப் பட்டமும், திருவிவிலியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
மேலும், பஞ்சாப்பில் உள்ள பட்டியாலா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டத்தையும், புது தில்லியில் உள்ள இந்திய மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைக் கல்வியில் முதுகலைப் பட்டத்தையும் பயின்றுள்ளார். 2001-ஆம் ஆண்டு மே 13 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்ற இவர்,பங்குப்பணியாளர், குருமட உதவி அதிபர், மறைமாவட்ட சமூகத்தொடர்பு மற்றும் விவிலிய ஆணையங்களின் இயக்குநர் என பல பொறுப்புக்களில் பணியாற்றியவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்