பூர்வீகக் குடியினர் தங்கள் தனித்தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பூர்வீகக் குடிமக்கள் தங்கள் கலாச்சாரத் தனித்தன்மையையும், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் உரிமையை வலியுறுத்தி ஐ.நா. கூட்டத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
IFAD எனப்படும் ஐ.நா.வின் வேளாண் வளர்ச்சிக்கான பன்னாட்டு நிதி அமைப்பினால் அதன் உரோம் நகர் தலைமையகத்தில் பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளில் இடம்பெறும் பூர்வீகக் குடியினர் குறித்த 7வது கருத்தரங்கிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலம், நீர், உணவு என்பவையெல்லாம் வெறும் பொருட்கள் அல்ல, மாறாக, அவை வாழ்வின் அடிப்படை, மற்றும் இயற்கையோடு பூர்வீகக் குடியினரின் பிணைப்பு என அதில் குறிப்பிட்டுள்ளார்.
‘சுய நிர்ணயத்திற்கான பூர்வீகக் குடியினரின் உரிமை: உணவு பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அது பாதை’ என்ற தலைப்பில் இடம்பெறும் கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், பூர்வீகக் குடியினர் தங்கள் தனித்தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை இருக்கின்றபோதிலும், இன்றைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்களும் நாடுகளும் விவசாய நிலங்களைப் பறித்துக் கொள்வதால் இந்த உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது என கவலையை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு, பூர்வீகக்குடிகளுக்குரிய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுவதால் பூர்வீக மக்களின் மாண்புடன் வாழ்வதற்கான உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை தன் செய்தியில்.
பூர்வீகக் குடிமக்கள் இந்த உலக சமூகத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும், மற்றும், இயற்கை வளங்களை அனுபவிப்பதற்கான அவர்களின் உரிமைகள் ஏற்கப்பட வேண்டும் என மேலும் தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூர்வீகக் குடிமக்களின் உரிமைகள் மதிக்கப்படுவது நீதியோடு தொடர்புடையது மட்டுமல்ல, மனித குலத்தின் வருங்காலத்தை உறுதி செய்வதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பதட்டநிலைகளாலும் சிக்கல் நிரம்பிய சவால்களாலும் நிறைந்திருக்கும் இன்றைய உலகிற்கு பூர்வீகக் குடிகளின் முன்னோர் தந்த பாரம்பரியம், நிகழ்காலத்திற்கு, எதிர்நோக்கின் வைகைறையைத் திறந்து விடுகிறது என மேலும் IFAD கூட்டத்திற்கான தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்