மார்ச் & ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும் திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நிகழவிருக்கும் திருவழிபாட்டு விழாக்களுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது வத்திக்கானின் தலைமை அலுவலகம்.
இதன்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் மாதங்களில் பல திருவழிபாட்டு விழாக்களுக்குத் தலைமை ஏற்கிறார். முதலாவதாக, தவக்காலம் தொடங்கும் மார்ச் 5- ஆம் தேதி, புதன்கிழமையன்று, உரோமையிலுள்ள புனித சபீனா பேராலயத்தில் திருநீற்றுப் புதன் திருப்பலியைத் தலைமையேற்று வழிநடத்துகிறார் திருத்தந்தை.
அதன்பிறகு மார்ச் 9-ஆம் தேதி, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழும் திருப்பலிக்குத் தலைமை தாங்குகிறார். அதனைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட உயர் அதிகாரிகளுடன் இணைந்து ஒரு வாரகால தியானத்தைத் தொடங்குவார். இத்தியானம் மார்ச் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும்.
இன்னொரு சிறப்பம்சமாக, ஏப்ரல் 6-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, நோயுற்றோர் மற்றும் உலக நலத்திற்காக நிகழும் திருப்பலிகுத் தலைமை ஏற்கிறார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்