வத்திக்கானில் கலைஞர்களுக்கான விழா தொடங்க உள்ளது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் விழா பிப்ரவரி 15 முதல் 18 வரை வத்திக்கானில் இடம்பெற உள்ளது என்று பிப்ரவரி 12, இப்புதனன்று காலை, திருப்பீடச் செய்தித் தொடர்பக அலுவலகத்தில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பின் ஒன்றின்போது தெரிவித்தார் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino de Mendonça.
இந்தச் சிறப்பு யூபிலியின் முதல் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 15, சனிக்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழும் திருப்பலிக் கொண்டாட்டத்திற்குத் திருத்தந்தை தலைமை தாங்குவார் என்றும், பின்னர் அன்றைய தினம், கலைஞர்கள் பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவு வழியாகத் திருப்பயணம் மேற்கொள்வார்கள் என்றும் உரைத்தார் கர்தினால் Mendonça.
மேலும் அன்றைய தினம், கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறை, வத்திக்கான் அருங்காட்சியகத்துடன் இணைந்து, "நம்பிக்கை பகிர்வு-கலாச்சாரப் பாரம்பரியத்தின் எல்லைகள்" என்ற தலைப்பில் அனைத்துலகக் கூட்டம் ஒன்றை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார் கர்தினால்.
கலை மற்றும் கல்வி உலகிலுள்ள அருங்காட்சியக இயக்குநர்கள் மற்றும் இயக்குபவர்கள் (operators) மற்றும் கலாச்சார நிறுவனங்களுக்கு சமய மற்றும் கலை பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தற்போதைய சாத்தியங்கள், வழிமுறைகள் மற்றும் மொழிகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு ஓர் இடத்தை வழங்குவதை இந்தச் சந்திப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் எடுத்துக்காட்டினார் கர்தினால் Mendonça.
அனைத்துலகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தின் முடிவில், மதங்களின் கலாச்சார நெறிமுறைகளைப் பரப்புவதற்கான கல்வி அறிக்கை ஒன்று கையெழுத்திடப்படும் என்றும் இச்சந்திப்பின்போது தெரிவித்தார் கர்தினால்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் José Tolentino de Mendonça அவர்களுடன் இத்தாலிய சட்டமாமன்ற மேலவை உறுப்பினர் லூசியா போர்கோன்சோனி, கலாச்சார அமைச்சகத்தின் துணைச் செயலாளர்; லீனா தெ தொமேனிக்கோ, இத்தாலியக் குடியரசின் நீதித்துறை அமைச்சகத்தின் சிறை நிர்வாகத் துறையின் செயல் தலைவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்