ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை நோக்கிய புதிய வழிகள்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
Laudato Si’ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நடைபெற்றுவரும் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைவதற்கு, தனிநபர் அளவிலும், சமுதாய அளவிலும் மாற்றம் அவசியம் என்று கூறியுள்ளார்.
ஃபோக்கோலாரே இயக்கம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் பிரதிநிதிகள் மற்றும், உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம் ஆகியவற்றின் முயற்சியால் அக்டோபர் 23 இவ்வெள்ளி முதல் 25 ஞாயிறு முடிய நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, தன் நல்வாழ்த்துக்களை திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம், நீடித்த நிலையான முன்னேற்றம் மற்றும், மதங்களின் பங்கு ஆகியவை உட்பட, இக்காலக்கட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களை, இந்தக் கூட்டத்தினர் ஆய்வுசெய்து வருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் எல்லாரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் மற்றும், அவரின் கொடையாகிய படைப்பின் பாதுகாவலர்கள் என்ற உணர்வை, நம் சகோதரர், சகோதரிகளில் ஏற்படுத்த, இந்த ஆய்வுகள் உதவும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
நாம் ஒருவர் ஒருவருடனும், நம்மைச் சுற்றியுள்ள உலகோடும் கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வு, எல்லாச் சூழல்களிலும், அனைவரின் மாண்பைப் போற்றி வளர்க்கவும், வறுமைக்குக் காரணமான அமைப்புமுறைகளுக்கு எதிராகச் செயல்படவும், இயற்கையைப் பாதுகாக்கவும், உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நம்மை வலியுறுத்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
மனிதக்குடும்பத்தின் பொதுநலன், மற்றும், படைக்கப்பட்ட உலகுக்காக, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தக் கூட்டத்தினரின் ஆய்வுகளை ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டு, இந்த செய்தியை நிறைவு செய்துள்ளார்.
“ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை நோக்கிய புதிய வழிகள்: ஐந்து ஆண்டுகள் சென்று Laudato Si’” என்ற தலைப்பில் இந்த பன்னாட்டு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்