வாழ்வையும் அழகையும் குறித்து அக்கறையுடன் செயல்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இவ்வுலக வாழ்வு, மற்றும், அழகை அக்கறையுடன் நடத்துவதற்கு தேவையான பலத்தை எமக்கு அருளும் என்ற வேண்டுதலை வெளிப்படுத்தும் டுவிட்டர் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 28, இத்திங்களன்று வெளியிட்டார்.
“உம் படைப்பின் ஒவ்வொரு சிறு பொருளிலும் உள்ளிருக்கும் எல்லாம் வல்ல இறைவா! வாழ்வையும் அழகையும் குறித்து அக்கறையுடன் செயல்பட, தேவையான அன்பு, மற்றும், பலத்தால் எம்மை நிரப்பியருளும்” என்ற சொற்களுடன், திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தி வழியே, இறைவேண்டல் செய்துள்ளார்.
மேலும், செப்டம்பர் 27, ஞாயிறன்று, நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், பிறரன்பு அமைப்புகளின் பாதுகாவலரான புனித வின்சென்ட் தெ பால் அவர்களின் திருவிழா இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதை நினைவூட்டி, உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதில் அவரின் எடுத்துக்காட்டு நமக்கு உதவட்டும் என அதில் கூறியுள்ளார்.
ஏழைகளின் முகத்தில் இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு உதவ நாம் அழைக்கப்படுகிறோம், என தன் இரண்டாவது டுவிட்டரிலும், இயேசு, மற்றும், அவரின் பெற்றோர் எகிப்துக்கு தப்பியோடியதைப்போல், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவவேண்டிய கடமை குறித்து தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியிலும், ஞாயிறு நற்செய்தி வாசகம் விடுத்த அழைப்பு குறித்து தன் நான்காவது டுவிட்டரிலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்