படைப்பின் காலம் - திருத்தந்தையின் ஐந்து டுவிட்டர் செய்திகள்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
செப்டம்பர் 1 இச்செவ்வாய்க்கும், அக்டோபர் 4ம் தேதி கொண்டாட்டப்படும் அசிசி நகர், புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவுக்கும் இடைப்பட்ட நாள்களில், படைப்பின் காலம் சிறப்பிக்கப்படுவதையும், இச்செவ்வாயன்று, படைப்பைப் பாதுகாப்பதற்கென இறைவேண்டல் புரியும் நாள் சிறப்பிக்கப்பட்டதையும் ஒட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் முதல் தேதி, ஐந்து டுவிட்டர் செய்திகளை வெளியிட்டிருந்தார்.
இந்தச் சிறப்புக்காலத்திற்கென திருத்தந்தை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட ஒருசில எண்ணங்கள், #JubileeForTheEarth மற்றும், #SeasonOfCreation என்ற இரு 'ஹாஷ்டாக்'குகளுடன் வெளியிடப்பட்டிருந்தன.
"படைப்பைப் பாதுகாப்பதற்கென இறைவேண்டல் புரியும் நாள் இன்று குறிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து, அக்டோபர் 4ம் தேதி முடிய, நாம், பல்வேறு திருஅவைகளையும், பாரம்பரியங்களையும் கொண்ட நம் கிறிஸ்தவ சகோதரர், சகோதரிகளுடன், பூமிக்கோளத்தின் யூபிலியைக் கொண்டாடுகிறோம்" என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.
"பூமிக்கோளத்தின் யூபிலி என்ற எண்ணம், நம் அயலவரைக் குறித்து, சிறப்பாக, வறியோரையும், மிக நலிவுற்றோரையும் குறித்து சிந்திக்க நம்மை அழைக்கிறது. அனைவருக்கும் பொதுச் சொத்தாக இறைவன் உருவாக்கிய அன்புத் திட்டத்தை, மீண்டும் நமதாக்கிக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற எண்ணம் திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம் பெற்றிருந்தது.
படைப்பின் முதல் அழைப்பு, ஓர் அன்பின் குழுமமாக வாழ்வது என்பதையும், இந்தப் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தை பிறரோடு பகிர்ந்து வாழும் உறவில் நாம் உயிர் வாழ்கிறோம் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார்.
நம்மைப் படைத்தவரான இறைவனோடும், அவரது படைப்புக்கள் அனைத்தோடும், நம் அயலவரோடும் நல்லிணக்கம் கொண்டு வாழ்வதற்கு, படைப்பின் காலம் என்ற இந்த சிறப்புக்காலம் வழங்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நான்காவது, மற்றும் ஐந்தாவது டுவிட்டர் செய்திகளில் வெளியிட்டிருந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்