தேடுதல்

விவிலியத் தேடல்  விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்

நமது தவறுகளிலிருந்து மனம் திரும்பி, இறைவனிடம் புது வாழ்வையும் மீட்பையும் மன்றாட அழைக்கிறது. இறைவனின் முக ஒளியை நாடி, அவரது இரக்கத்தால் மாற்றம் பெற்று, கிறிஸ்துவின் வழியில் புதிய மனிதர்களாக வாழ்வோம்.

அருட்பணி. ஆண்டனி லாரன்ஸ்

திருப்பாடல் 80: 1-2, 4-6

“ஆண்டவரே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!”

இந்தத் திருப்பாடல், புது வாழ்வுக்காகவும் மறுவாழ்வுக்காகவும் இறைவனிடம் மன்றாடும் ஓர் இறைவேண்டல் ஆகும். தனிமனிதனின் வாழ்வை மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஏக்கத்தையும் இது வெளிப்படுத்துகிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடந்த காலத்தை நினைவுகூர்ந்து, தங்கள்மீது இறைவன் காட்டிய அன்பையும் இரக்கத்தையும் உணர்கிறார்கள். இறைவன் தங்கள் ஆயராக இருந்து, தமது மக்களை வழிநடத்தி, பாதுகாத்து, பராமரித்ததை நினைவுகூர்ந்து, “ஆண்டவரே, மீண்டும் எங்களை மீட்டெடுத்து புது வாழ்வு தாரும்” என்று மன்றாடுகிறார்கள்.

துன்பங்களாலும் எதிரிகளின் கொடுமைகளாலும் மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் கண்ணீர் நாள்தோறும் உணவாகிவிட்டது போன்ற துயரமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தங்கள்மீது இரக்கம் கொண்டு, தமது சினத்தைத் தணித்து, தங்களை மீண்டும் உயர்த்துமாறு இறைவனிடம் வேண்டுகின்றனர். இந்தத் திருப்பாடல் நமது வாழ்வுக்கும் ஒரு முக்கியமான செய்தியைத் தருகிறது. நாம் இறைவனுக்கு எதிராகச் செயல்படும்போது, நமது தவறுகளை உணர்ந்து மனம் திரும்ப வேண்டும். முதலில் நமது குற்றங்களையும் பாவங்களையும் நேர்மையாக ஏற்றுக்கொண்டு, இறைவனிடம் அவற்றை அறிக்கையிட்டு, அவரிடம் முழுமையாகச் சரணடைய வேண்டும்.

நாம் உண்மையான மனமாற்றத்துடன் இறைவனை நாடும்போது, அவர் நம்மை மன்னித்து புது வாழ்வுக்கான வாய்ப்பை வழங்குகிறார். அந்தப் புது வாழ்வைப் பெற்றுக்கொண்ட பிறகு, பழைய பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, புதிய மனிதர்களாக மாறி, கிறிஸ்துவின் வழியில் வாழ வேண்டும். எனவே, நமது துன்பங்கள், சோதனைகள், கவலைகள் மற்றும் அவமானங்களிலிருந்து நம்மை விடுவித்து, மாற்றத்தையும் புது வாழ்வையும் அருளுமாறு இறைவனிடம் நம்பிக்கையுடன் மன்றாடுவோம்.

செபம்

அன்பு இறைவா, எங்களுக்கு புது வாழ்வையும் உண்மையான மாற்றத்தையும் தாரும். எங்கள் குற்றங்களையும் தவறுகளையும் மன்னித்து, உமது இரக்கத்தால் எங்களை ஏற்றுக்கொள்ளும். சோதனைகள், துன்பங்கள், கவலைகள் மற்றும் அவமானங்களிலிருந்து எங்களை விடுவித்து, கிறிஸ்துவைப் போல வாழ உமது அருளையும் வலிமையையும் தாரும். ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஆகஸ்ட் 2026, 15:22