தேடுதல்

விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்

இக்கட்டான நேரங்களிலும் இறைவனையே நமது அடைக்கலமாக நம்பி, அவரிடம் இரக்கத்திற்காக மன்றாடுவோம்.

திருப்பாடல் 57: “கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்”

அருட்பணி. ஆண்டனி லாரன்ஸ்

அன்பான இறைமக்களே, நம்மை அன்பினாலும் அருளினாலும் நிறைத்திருக்கும் இறைவனை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளவும், உணர்ந்துகொள்ளவும் இன்றைய இறைவார்த்தை நம்மை அழைக்கிறது. இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் 57 தாவீது மிகுந்த ஆபத்தான சூழ்நிலையில் இருந்தபோது பாடிய இறைவேண்டலாகும். தாவீதைக் கொன்று அழிப்பதற்காக அரசன் சவுல் அவரைத் தேடிக்கொண்டிருந்தான். உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில், தாவீது ஒரு குகையில் மறைந்திருந்தார். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சமும், மரண பயமும் அவரைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அந்த இக்கட்டான நேரத்திலும் அவர் மனிதர்களை மட்டும் நம்பாமல், இறைவனையே தனது ஒரே அடைக்கலமாகவும் தஞ்சமாகவும் பற்றிக்கொண்டார். அதனால்தான் அவர், “கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; உமது இறக்கைகளின் நிழலில் நான் தஞ்சம் புகுகின்றேன்” என்று மன்றாடுகிறார். இறைவன் தம்மைக் கைவிடமாட்டார் என்ற ஆழமான நம்பிக்கை அவரிடம் இருந்தது. மேலும், “எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார்” என்ற உறுதியுடனும் அவர் இறைவனை நம்பினார்.

நமது வாழ்க்கையிலும் சில நேரங்களில் இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள், பயங்கள், துயரங்கள் மற்றும் நம்பிக்கையற்ற தருணங்கள் வரலாம். அப்போது நமது உதவி மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல, விண்ணகத்திலிருந்து வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையான நம்பிக்கையுடன் இறைவனைத் தேடி மன்றாடும்போது, அவர் நமது வாழ்வில் தேவையான உதவியை உரிய நேரத்தில் வழங்குவார். தாவீது தனது எதிரிகளைவிட இறைவனின் வல்லமையைப் பெரிதாகக் கண்டார். “படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கையில் நாம் ஏன் அஞ்ச வேண்டும்?” என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தார். நமக்கு எதிராக எத்தனை பேர் நின்றாலும், இறைவன் நம் பக்கம் இருக்கிறார் என்ற உணர்வு நமக்கு துணிவை அளிக்க வேண்டும்.

மேலும், “உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது; உமது உண்மை முகில்களைத் தொடுகிறது” என்று தாவீது இறைவனின் பேரன்பையும் உண்மைத்தன்மையையும் புகழ்கிறார். இறைவன் அளிக்கும் வாக்குறுதிகள் ஒருபோதும் பொய்யானவை அல்ல; அவை உண்மையானவை. அவர் கூறியதை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, இன்றைய நாளில் நமது இக்கட்டான தருணங்கள் அனைத்திலும் இறைவனையே பற்றிக்கொள்வோம். அவருடைய இறக்கைகளின் நிழலில் தஞ்சம் அடைவோம். அவர் நம்மீது இரக்கம் கொண்டு, நம்மைப் பாதுகாத்து, நமது வாழ்விற்கு தேவையான உதவியையும் வலிமையையும் வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் மன்றாடுவோம்.

செபம்

எங்களை நாளும் காத்துப் பராமரிக்கும் அன்பு இறைவா,
தாவீதை அரசன் சவுலின் துன்புறுத்தலிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் பாதுகாத்தீர். அதுபோல, எங்கள் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைகள், அச்சங்கள், துன்பங்கள் மற்றும் எதிர்ப்புகளின் மத்தியிலும் எங்களுக்குத் துணையாக இருப்பீராக. உமது இறக்கைகளின் நிழலில் நாங்கள் தஞ்சம் அடைகிறோம். எங்கள்மீது இரக்கம் காட்டி, எங்களைப் பாதுகாத்து, எங்கள் தேவைகளில் உதவி செய்து, உமது பேரன்பையும் வாக்குறுதிகளையும் எங்கள் வாழ்வில் அனுபவிக்கச் செய்தருளும்.

எங்கள் அடைக்கலமும் அரணும் நீரே என்பதை உணர்ந்து, எல்லா நேரங்களிலும் உம்மையே நம்பி வாழ அருள்தாரும். ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஆகஸ்ட் 2026, 15:00