தேடுதல்

விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்

இறைவன் தகுதியற்றவர்களையும் தேர்ந்தெடுத்து உயர்த்துகிறார் என்பதை தாவீதின் வாழ்வு எடுத்துக்காட்டுகிறது. நாமும் இறைவனின் அழைப்பை நம்பிக்கையுடன் ஏற்று, அவரிடம் ஒப்புக்கொடுத்தால், அவர் நம் வாழ்வையும் ஆசீர்வதித்து வழிநடத்துவார்.

திபா 89 : 19 - 21, 26 - 27

என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடித்தேன்.

அருட்பணி. பால் ராஜ்

அன்பிற்கினிய இறைமக்களே, இன்று இறைவன் நமக்கு ஒரு புதிய நாளை, ஆசீர்வாதம் நிறைந்த நாளை அருளியிருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு நன்றி செலுத்துவோம்.

"என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்." என்ற இந்த இறைவார்த்தை இறைவன் மனிதரை எவ்வாறு தேர்ந்தெடுத்து உயர்த்துகிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. தகுதியுடையவர்களை அல்ல, தகுதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தகுதிப்படுத்துகிறவர்தான் நம் இறைவன். தாவீது ஒரு சாதாரண ஆடு மேய்க்கும் சிறுவன். தனது சொந்த சகோதரர்களால்கூட பெரிதாகக் கருதப்படாதவர். ஆனால், அந்த எளிய சிறுவனை இறைவன் கண்டுபிடித்து, அவரை இஸ்ரயேலின் அரசனாக உயர்த்தினார். இதையே இன்றைய திருப்பாடல் அழகாக எடுத்துரைக்கிறது. இந்த திருப்பாடல், தாவீதோடு இறைவன் செய்த உடன்படிக்கையையும், அவர் அளித்த வாக்குறுதிகளையும் நினைவுபடுத்துகிறது. அதே நேரத்தில், "ஆண்டவரே, நீர் எங்கே இருக்கிறீர்?" என்று துன்பத்தில் மன்றாடும் மக்களின் குரலாகவும் அமைகிறது. எனவே, நமது நம்பிக்கை சோதிக்கப்படும் நேரங்களிலும், தனிமை மற்றும் துன்பங்களைச் சந்திக்கும் வேளைகளிலும், இந்த திருப்பாடல் நமக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கிறது.

"வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்கு திருப்பொழிவு செய்தேன்."

இறைவன் தாவீதைக் கண்டுபிடித்து, தேர்ந்தெடுத்து, திருப்பொழிவு செய்து உயர்த்தியதை இந்த வசனங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான உண்மையை அறிகிறோம். இறைவன் தகுதியுடையவர்களை அழைப்பதில்லை; அழைத்தவர்களைத் தகுதிப்படுத்துகிறார். இதற்கு தாவீது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதுபோலவே, இயேசுவின் சீடர்களையும் நினைத்துப் பாருங்கள். அவர்கள் அறிஞர்களோ அதிகாரிகளோ அல்ல. மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்ற எளிய மனிதர்களே. ஆனால், அந்த எளியவர்களையே இயேசு அழைத்து, தனது திருச்சபையின் அடித்தளமாக மாற்றினார். குறிப்பாக, சாதாரண மீனவராக இருந்த பேதுருவை அழைத்து, "என் திருச்சபையின் தலைவராக" பொறுப்பளித்தார். இதுவே இறைவனின் செயல்முறை. அவர் எளியவர்களை அழைத்து, அவர்கள்மூலம் வல்ல செயல்களை நிறைவேற்றுகிறார். இன்று நாமும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்:

இறைவனின் அழைப்புக்குச் செவிசாய்க்க நான் தயாராக இருக்கிறேனா? என் வாழ்வை முழுமையாக அவரிடம் ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறேனா?

நாம் இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, முழுமையாக அவரிடம் ஒப்புக்கொடுத்தால், அவர் நம்மையும் நிச்சயமாக உயர்த்துவார். இந்த நம்பிக்கையை இன்றைய திருப்பாடல் நமக்குக் கொடுக்கிறது.

ஜெபம்

அன்பு ஆண்டவரே, இந்த அழகான புதிய நாளை எங்களுக்கு அருளியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தாவீதுக்கு நீர் அளித்த வாக்குறுதிகளை இன்று தியானித்தோம். எங்களையும் உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதற்காக உமக்கு நன்றி. நாங்கள் வழிதவறி நடக்கும்போது, உமது அன்பினால் எங்களைத் திருத்தி வழிநடத்தும். ஆனால் ஒருபோதும் உமது திருமுகத்தை எங்களிடமிருந்து மறைக்காதேயும். எங்கள் வாழ்வில் எழும் புயல்களை அடக்கும் வல்லவர் நீரே. எங்கள் கேள்விகள், சந்தேகங்கள், பயங்கள், குழப்பங்கள் அனைத்தையும் உமது சிலுவையின் அடியில் வைக்கிறோம். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், "நீரே என் தந்தை; நீரே என் கன்மலை" என்று உறுதியுடன் அறிக்கையிடும் விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருளும். துன்பத்தின் நடுவிலும் உம்மைத் துதிக்கும் வரத்தை அளித்தருளும். எங்கள் கண்ணீரைத் துடைத்து, இந்த நாளில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் ஆசீர்வதித்து, வெற்றியின் பாதையில் நடத்தும்.

ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஆகஸ்ட் 2026, 15:31