தேடுதல்

அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை அலுவலகம். அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை அலுவலகம்.  (@ USCCB Office)

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு எதிராக அமெரிக்க ஆயர்களின் இறைவேண்டல் இயக்கம்

கருக்கலைப்பு மாத்திரைகளின் பரவலைத் தடுக்கும் நோக்கில், இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறும் இவ்வியக்கத்தில், வாழ்வின் பாதுகாவலரான புனித யோசேப்பின் பரிந்துரையை நாடி சிறப்பு செபம் மேற்கொள்ளப்படுகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவையின் (USCCB) வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கான குழு, கருக்கலைப்பு மாத்திரைகளின் பரவலைத் தடுக்கும் நோக்கில் இறைவேண்டல் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய சிறப்பு இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 18ஆம் நாள் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை இடம்பெறும் இந்த இயக்கத்தில் கத்தோலிக்கர்கள் பங்கேற்குமாறு அமெரிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“ஒவ்வொரு கருக்கலைப்பும் ஒரு குழந்தையின் உயிரிழப்பையும், தாய்க்கு ஏற்படும் பாதிப்பையும் உள்ளடக்கியது என்றும், கருக்கலைப்பு மாத்திரைகள் எளிதில் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில், கருக்கலைப்புகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உடல்நல ஆபத்துக்களும் அதிகரித்து வருவது கவலைக்குரியது” என்று அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் பால் கோக்லி அவர்களும், வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவர் ஆயர் டேனியல் தாமஸ் அவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, “வாழ்வின் பாதுகாவலரான புனித யோசேப்பின் பரிந்துரையை நாடி” ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழிகளில் சிறப்பு செபம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கருக்கலைப்பு மாத்திரைகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அறிந்துகொள்ளவும், அவற்றுடன் தொடர்புடைய மருந்தகங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும் கத்தோலிக்கர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் “வாழ்வைப் போற்றும் மாதத்தை” முன்னிட்டு, இந்த இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலை

தொலை மருத்துவ ஆலோசனைகள் மூலம் கருக்கலைப்பு மாத்திரைகளைப் பரிந்துரைக்கவும், அவற்றை மருந்தகங்கள் மற்றும் இணையதளங்கள் வழியாக விற்பனை செய்யவும் அனுமதிப்பது, கருவில் வளரும் குழந்தையின் உயிரைப் பாதுகாக்கும் சில மாநிலச் சட்டங்களைத் தவிர்க்க வழிவகுக்கிறது என்று அமெரிக்க ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பெண்கள் மருத்துவக் கண்காணிப்பின்றி தங்களது வீடுகளிலேயே தனியாக கருக்கலைப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்படக்கூடும் என்றும், வன்முறையான துணைவர்கள் அல்லது மனிதக் கடத்தல்காரர்களால் சுரண்டப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற கருக்கலைப்புகளில் 58 விழுக்காடு கருக்கலைப்பு மாத்திரைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஆகஸ்ட் 2026, 13:20