தேடுதல்

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நபர் (கோப்புப் படம்) அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நபர் (கோப்புப் படம்) 

கருணைக்கொலைக்கு பதிலாக நேர்மறையான மாற்று வழிகளை வலியுறுத்தும் சிட்னி பேராயர்

ஆஸ்திரேலியாவில் 'மருத்துவர்களின் உதவியுடன் சட்டப்பூர்வமாகத் தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்' (Voluntary Assisted Dying - VAD) முறையை மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சிட்னி பேராயர் அந்தோணி ஃபிஷர் அவர்கள், கருணைக்கொலைக்கு மாற்றாக இரக்கமிக்க பராமரிப்பு, வலி நிவாரண சிகிச்சை மற்றும் ஆன்மீக ஆதரவை ஊக்குவிக்குமாறு திருஅவைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

 'மருத்துவர்களின் உதவியுடன் சட்டப்பூர்வமாகத் தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்' (Voluntary Assisted Dying - VAD) முறையை விரிவுபடுத்துவதை நோக்கி ஆஸ்திரேலியா நகரும் நிலையில், கருணைக்கொலைக்கு பதிலாக இரக்கத்துடன் கூடிய மாற்று வழிகளை ஊக்குவிக்குமாறு கத்தோலிக்க திருஅவைக்கு சிட்னி பேராயர் அந்தோணி ஃபிஷர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கருணைக்கொலை ஒப்புதல்களுக்கான இணையவழி ஆலோசனைகளுக்கு உள்ள  மத்திய அரசின் தடைகளை அகற்றுவதற்கும், எதிர்காலத்தில் இந்த தன்னார்வ மரண சட்டத்தின் மீது சட்டமியற்றுபவர்கள் மனச்சான்றின்படி வாக்களிக்க அனுமதிப்பதற்கும் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி வாக்களித்து ஆதரவளித்ததைத் தொடர்ந்து அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவு இன்னும் சட்டமாக மாறவில்லை என்றாலும், கருணைக்கொலையை எளிதாக அணுகுவதற்கான மற்றொரு படியை இது குறிக்கிறது என்று பேராயர் ஃபிஷர் எச்சரித்துள்ளார். இந்த முன்மொழிவை அவர் தொலைதூர மருத்துவம் என்பதற்கு பதிலாக தொலைதூர மரணம் என்று விவரித்தார். இணையவழி ஆலோசனைகள் மூலம் விரிவான மருத்துவ மதிப்பீடுகள், வலி நிவாரண சிகிச்சை பற்றிய உரையாடல் மற்றும் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையேயான நேரடி தனிப்பட்ட உறவுகள் ஆகியவை தவிர்க்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தனது முதல் தன்னார்வ மரண சட்டத்தை 2017 ஆம் ஆண்டில் விக்டோரியாவில் சட்டபூர்வமாக்கியது. அதன்பிறகு இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, மேலும் வடக்குப்பகுதியும் (Northern Territory) விரைவில் இதை சட்டபூர்வமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  'மருத்துவர்களின் உதவியுடன் சட்டப்பூர்வமாகத் தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்' முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 14,000-க்கும் மேற்பட்டோர் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், 7,000-க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் மூலம் இறந்துள்ளதாகவும் பேராயர் ஃபிஷர் சுட்டிக்காட்டினார்.

கருணைக்கொலை என்பது மனித மாண்பிற்கு எதிரானது என்ற கத்தோலிக்கத் திருஅவையின் போதனையை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு திருஅவையானது சிறந்த வலி நிவாரண சிகிச்சை, ஆன்மீக மற்றும் மேய்ப்புப் பணி ஆதரவு மற்றும் இரக்கத்துடன் கூடிய துணையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கருவுருதல் முதல் இயற்கையான மரணம் வரை ஒவ்வொரு மனித உயிரின் மாண்பையும் தொடர்ந்து நிலைநிறுத்தும் அதே வேளையில், கத்தோலிக்க மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் நலவாழ்வு வல்லுநர்கள் கருணைக்கொலையில் பங்கேற்பதில் இருந்து விலகிக்கொள்ள அனுமதிக்கும் வலுவான சட்டப் பாதுகாப்புகளுக்கும் பேராயர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஆகஸ்ட் 2026, 14:11