அமல மரியன்னை சகோதரிகள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி மரியா மல்கோர்சாதா தனது பணியில். அமல மரியன்னை சகோதரிகள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி மரியா மல்கோர்சாதா தனது பணியில். 

சகோதரி மாளகோர்ஸாதா: சேவையிலும் ஆன்மீகப் பரப்புரையிலும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு

தூய அன்னை மரியாவின் சகோதரிகள் சபையைச் சேர்ந்த சகோதரி மரியா மாளகோர்ஸாதா சுர் அவர்கள், சிறுவயதில் சந்தித்த பிரான்சிஸ்கன் சகோதரிகளின் இறைநம்பிக்கை, தாழ்ச்சி மற்றும் சேவை வாழ்வால் ஈர்க்கப்பட்டு தனது இறையழைப்பைக் கண்டறிந்தார். கல்வியியல் மற்றும் இறையியலில் பயின்ற அவர், மறைக்கல்வி ஆசிரியராகவும், பள்ளியாசிரியராகவும், நலிவுற்ற குழந்தைகளுக்கான மையங்களின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

தூய அன்னை மரியாவின் சகோதரிகள் சபையின் உறுப்பினரான சகோதரி மரியா மாளகோர்ஸாதா சுர் அவர்கள், தனது பங்கில் பணிபுரிந்த பிரான்சிஸ்கன் சகோதரிகளை சிறுவயதில் சந்தித்ததில் இருந்தே தனது இறை அழைப்பைக் கண்டறிந்தார். அவர்களின் தாழ்ச்சி, இறைநம்பிக்கை, இரக்கம் மற்றும் குடும்பங்களுக்கான சேவை ஆகியவை தனது வாழ்க்கையை கடவுளுக்கும் பிறருக்கும் அர்ப்பணிக்க இவரை ஊக்கப்படுத்தின.

துறவற வாழ்க்கையில் இணைந்த பிறகு, சகோதரி மாளகோர்ஸாதா தனது மரியன்னையின் மீதான பக்தியை ஆழப்படுத்தியதோடு, கல்வியியல் மற்றும் இறையியலில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இவர் மறைக்கல்வி ஆசிரியராகவும் பள்ளியாசிரியராகவும் பணிபுரிந்து, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை பரிவோடு வழிநடத்தினார். பின்னர் நோயுற்ற குழந்தைகளுக்கான மையம் மற்றும் அவசரகால உதவி மையம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று பணிபுரிந்தார். அங்கு இவர் பொறுமை, பொறுப்புணர்வு மற்றும் நலிவடைந்த மக்கள் மீதான பரிவுள்ள பராமரிப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.

யான் ஷ்னைடரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், ஆன்மீக மற்றும் நடைமுறை உதவிகள் மூலம் ஆபத்தான நிலையிலுள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு ஆதரவளிப்பதே இவரது சபையின் முதன்மை பணியாகும். "ஆன்மாக்களை மீட்டல்" என்ற இவரது சபையின் அருங்கொடையை வாழ்ந்து காட்டுவதே இவரது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது.

சகோதரி மாளகோர்ஸாதா, தியானங்கள், "துல்சிசிமா நாட்கள்", வானொலி நிகழ்ச்சிகள், வெளியீடுகள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் வாயிலாக சகோதரி துல்சிசிமா ஹாஃப்மேனின் ஆன்மீக பாரம்பரியத்தையும் பரப்பி வருகிறார். இந்த முயற்சிகள் இறைவேண்டல், தியாகம் மற்றும் அன்றாட அன்புச் செயல்கள் மூலம் மக்கள் புனிதத்தைக் கண்டறிய உதவுகின்றன.

சகோதரி துல்சிசிமா மீதான இவரது பக்தி, இவரது தனிப்பட்ட இறை அழைப்பை ஆழப்படுத்தியதோடு, வளர்ந்து வரும் ஓர் ஆன்மீகக் குடும்பத்தையும் வலுப்படுத்தியுள்ளது. தனது இறைநம்பிக்கை, கல்வி, சேவை மற்றும் ஆன்மீகப் பரப்புரை நிறைந்த வாழ்க்கையின் மூலம், எளிமையான, உண்மையுள்ள அன்பு மற்றும் பராமரிப்புச் செயல்கள் வழியாக புனிதத்தை வாழ்ந்து காட்ட முடியும் என்பதற்கு சகோதரி மாளகோர்ஸாதா அவர்கள் சான்றாகத் திகழ்கிறார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஆகஸ்ட் 2026, 13:52