சியோல் உலக இளைஞர் தினத்திற்கு முன்னோடியாக கத்தோலிக்கக் கலாச்சாரக் கண்காட்சி
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 7 வரை இடம்பெறவுள்ள சியோல் உலக இளைஞர் தினத்திற்கு (WYD Seoul 2027) முன்னோடியாக, கடந்த ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய நாள்களில் சியோலில் கத்தோலிக்கக் கலாச்சாரக் கண்காட்சி இடம்பெற்றது.
ஏறத்தாழ 40°C வெப்பநிலை பதிவாகி இருந்தபோதிலும், தியோக்சுகுங் (Deoksugung) அரண்மனை அருகே இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறத்தாழ 48 துறவற சபைகள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பார்வையாளர்கள் கொரியாவில் கத்தோலிக்கத்தின் வரலாறு குறித்த கண்காட்சிகளைப் பார்வையிட்டதோடு, இசை, ஓவியம், விளையாட்டுகள், கைவினைப்பொருட்கள் மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.
அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழும் இருபால் துறவியரைச் சந்திப்பதற்கும், துறவற வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் "இறையழைத்தல் உணவகம்" வாய்ப்புகளை வழங்கியது. தனிப்பட்ட, சமூக மற்றும் உலகளாவிய உறவுகளில் அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், "நல்லிணக்கப் பூங்கா" (Reconciliation Park) செபம் செய்வதற்கும், தனிப்பட்ட சிந்தனைக்கும், ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுவதற்குமான வாய்ப்புகளை வழங்கும் இடமாக அமைந்தது.
கத்தோலிக்கத்தைப் பற்றி அதிகம் அறியாதவர்கள் உள்பட, கொரியர்கள் மற்றும் உலகளாவியப் பார்வையாளர்கள் அனைவருக்கும் கத்தோலிக்க நம்பிக்கையையும் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமைந்தது என்று ஏற்பாட்டாளர்கள் விவரித்தனர்.
கொரியாவின் வெப்பமான கோடைக்கால நிலைமைகளுக்கும், அதிக எண்ணிக்கையிலான திருப்பயணிகளின் வருகைக்கும் ஏற்பாட்டாளர்களைத் தயார்படுத்த உதவும் வகையில், இந்த நிகழ்வு 2027 உலக இளைஞர் தினத்திற்கான (WYD) ஒரு நடைமுறை ஒத்திகையாகவும் அமைந்தது.
அண்மைய ஆய்வுகளின்படி, தென் கொரிய மக்கள் தொகையில் கத்தோலிக்கர்கள் ஏறத்தாழ 11 விழுக்காடாக உள்ளனர், அதே வேளையில் 51 விழுக்காடு மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்களாகத் தங்களை அடையாளம் காட்டுகின்றனர்.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.