2026.08.24 Slovakia Universit

ஆண்டன் நெய்விர்த் நினைவாக ஸ்லோவாக்கியாவில் அமையும் புதிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்

திருப்பீடத்திற்கான ஸ்லோவாக் குடியரசின் முதல் தூதரான ஆண்டன் நெய்விர்த் அவர்களின் நினைவாக புதிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான திட்டங்கள் ஸ்லோவாக்கியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

திருப்பீடத்திற்கான ஸ்லோவாக்கியாவின் முதல் தூதரான மறைந்த ஆண்டன் நெய்விர்த் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அந்நாட்டில் புதிய பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தை கத்தோலிக்க உணர்வால் ஈர்க்கப்பட்டு  பிராட்டிஸ்லாவா அருகே 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  ஆண்டன் நெய்விர்த் கல்லூரி முன்னெடுத்து வருகிறது. இக்கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கத்தோலிக்க அறநெறி, தத்துவம், கலை மற்றும் சமகாலப் பிரச்சினைகள் குறித்தப் பயிற்சிகளை வழங்குகிறது. மேலும், இது 'சிடாடேலா' தொடக்கப் பள்ளி மற்றும் ஆண்டன் நெய்விர்த் மேல்நிலைப் பள்ளியையும் நடத்தி வருகிறது.

நெய்விர்த்தின் 105-வது பிறந்தநாள் கொண்டாட்டத் திருப்பலியின் போது, ஜிலினா மறைமாவட்ட ஆயர் தோமாஷ் காலிஸ் அவர்கள், மன்னிப்பு, பொறுமை மற்றும் அன்பு போன்ற கிறிஸ்தவ விழுமியங்களின் நிலையான முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.

ஸ்லோவாக்கியாவின் முதல் மக்களால் உருவாக்கப்பட்ட (grassroots) பல்கலைக்கழகமாக மாறும் நோக்கில், ஒரு புதிய வளாகத்திற்கான பணிகளை இக்கல்லூரி தற்போது தொடங்கியுள்ளது. இந்த வளாகம் பல்கலைக்கழகப் பாடப் பிரிவுகளையும், கல்லூரியின் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும். 2025 இலையுதிர்காலத்தில் வத்திக்கானில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போது, திருத்தந்தை அவர்கள் இதற்கான அடிக்கல்லை ஆசீர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்யூனிச ஆட்சியின் கீழ் "வத்திக்கான் முகவர்" என்று குற்றம் சாட்டப்பட்டு அரசியல் கைதியாக இருந்தவரும் பின்னர் திருப்பீடத்திற்கான ஸ்லோவாக்கியாவின் முதல் தூதராக நியமிக்கப்பட்டவருமான நெய்விர்த் (1921-2004), ஒரு மருத்துவர் ஆவார். அவர் நல்லிணக்கத்தை ஊக்குவித்ததுடன், "தீமையை அன்பால் குணப்படுத்துங்கள்" (Cure Evil with Love) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இக்கல்லூரியின் ஆதரவாளர்கள், அவரைப் புனிதராக அறிவிப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதற்கான சூழல் உள்ளதா என்பதையும் பரிசீலித்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஆகஸ்ட் 2026, 15:32