கெர்சன் பங்கில் வயதான உக்ரைன் பெண்ணின் குறைகளைக் கேட்ட அருள்சகோதரி லிஜி பையப்பில்லி. கெர்சன் பங்கில் வயதான உக்ரைன் பெண்ணின் குறைகளைக் கேட்ட அருள்சகோதரி லிஜி பையப்பில்லி.  (Sister Liji Paiapilli)

“குண்டுகள் நம்பிக்கையை அழிக்க முடியாது” – உக்ரைனில் இந்திய அருள்சகோதரி லிஜி

உக்ரைனில் கடந்த 25 ஆண்டுகளாக மறைப்பணியாற்றி வரும் இந்திய அருள்சகோதரி லிஜி பையப்பில்லி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், ஒவ்வொரு நாளும் உயிருடன் விழித்தெழுவதற்காக உக்ரைன் மக்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உக்ரைன் தனது சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் இந்திய மறைப்பணியாளரான அருள்சகோதரி லிஜி பையப்பில்லி அவர்கள், அங்கு இடம்பெற்று வரும் போருக்கு மத்தியில் வாழும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

மேற்கு உக்ரைனில் உள்ள முகாச்சேவோவிற்கு அருகில் அமைந்துள்ள பாவ்ஷினோவை மையமாகக் கொண்டு பணியாற்றிவரும் சகோதரி லிஜி, ஆன்மீக உரையாடல்கள் மற்றும் பரிந்துரை செபம் வேண்டி தனது சபையின் மடத்திற்கு வரும் மக்களை அன்புடன் வரவேற்கிறார். இவரது இந்த சேவை, நாடு முழுவதிலும் உள்ள கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத மக்கள் மத்தியில் இவரைப் பற்றி அறியச் செய்துள்ளது.

ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழும் உக்ரைன் மக்களின் அன்றாட நிலையை விவரிக்கும் அவர், "ஒவ்வொரு காலையிலும் நாங்கள் விழித்தெழுந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம், ஒவ்வொரு மாலையிலும் நாங்கள் இன்னும் உயிரோடு இருப்பதற்காக நன்றி செலுத்துகிறோம்" என்று கூறுகிறார்.

அண்மையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் போர்முனையில் உள்ள நகரங்களுக்குப் பயணம் செய்து, போரினால் ஏற்பட்ட துயரங்களை நேரில் கண்ட சகோதரி லிஜி அவர்கள், "அழிவும் பயமும் சூழ்ந்திருந்தாலும், இறைவேண்டலே மக்களுக்கு பலத்தையும் துணிவையும் நம்பிக்கையையும் தருகிறது"  என்பதை வலியுறுத்துகிறார்.

சகோதரி லிஜியைப் பொறுத்தவரை, உண்மையான சுதந்திரம் என்பது பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் வாழ்வதற்கான உரிமையாகும். குண்டுவீச்சுகள் வீடுகளையும் நகரங்களையும் அழிக்கக்கூடும்; ஆனால், உக்ரைனிய மக்களின் நம்பிக்கையையும், வாழ வேண்டும் என்ற உறுதியையும், சுதந்திரத்திற்கான வேட்கையையும் அவற்றால் ஒருபோதும் அழிக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஆகஸ்ட் 2026, 15:18