ஊடகங்களில் அருள்சகோதரிகளின் குரலுக்கு வலுசேர்க்கும் SIGNIS உலக மாநாடு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
SIGNIS உலக மாநாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் காலை அமர்வு, திருஅவைக்கும் சமூகத்திற்கும் கத்தோலிக்க அருள்சகோதரிகள் ஆற்றிவரும் இன்றியமையாத பங்களிப்பை எடுத்துரைத்தது. உலகெங்கிலும் உள்ள அருள்சகோதரிகளுடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவங்களை, "கான்ராட் என். ஹில்டன் அறக்கட்டளையின் (Conrad N. Hilton Foundation) திட்டச் செயல்பாடுகளுக்கான இணைத்தலைவரும், 'கத்தோலிக்க அருள்சகோதரிகள் முன்னெடுப்பின்' (Catholic Sisters Initiative) தலைவருமான முனைவர் அருள்சகோதரி ஜேன் வகாஹியு அவர்கள் பகிர்ந்துகொண்டார்.
2026 ஆகஸ்ட் 6 அன்று ருவாண்டாவின் கிகாலியில் இடம்பெற்ற மாநாட்டில் தகவல் தொடர்புப் பணியாளர்களிடம் உரையாற்றிய அவர், இரண்டு முக்கிய முன்னெடுப்புகளை எடுத்துரைத்தார். தகவல் தொடர்புக்கான திருப்பீடத் துறையால் செயல்படுத்தப்படும் பெந்தக்கோஸ்தே திட்டம், கத்தோலிக்க அருள்சகோதரிகளை இணைத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் குரல்களை வலுப்படுத்துகிறது. மேலும், Wisdom Calls திட்டம், அருள்சகோதரிகளையும் வணிக ஊடகத் தளங்களையும் இணைக்கிறது என்று குறிப்பிட்டார்.
“கதை சொல்லலில் இறைவாக்கு சாட்சியம்” என்ற தலைப்பில் பேசிய அருள்சகோதரி ஜேன் அவர்கள், இறைவனிடமிருந்து உருவாகும் தொடர்பாடல், பாலமாகச் செயல்படும் தொடர்பாடல், நம்பிக்கையை வழங்கும் தொடர்பாடல், விளிம்புநிலை மக்களை மையப்படுத்தும் தொடர்பாடல் மற்றும் அன்பின் வெளிப்பாடாக அமையும் தொடர்பாடல் என ஐந்து பரிமாணங்களை வலியுறுத்தினார்.
மேலும்,கத்தோலிக்க ஊடகப் பணியில் கதையாடல் என்பது வெறும் விளம்பரம் அல்ல; அது நற்செய்திக்கான சேவை என்றும் குறிப்பிட்ட அவர், குறிப்பாக மோதல், துன்பம் மற்றும் நிச்சயமற்ற சூழல்களிலும் உலகில் இறைவனின் பிரசன்னத்தை மக்கள் உணர இது உதவுகிறது என்று எடுத்துக்காட்டினார்.
திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் துணை இயக்குநர் அருள்சகோதரி நினா கிராபிச் அவர்கள், துறவறப் பெண்களின் வாழ்வை ஊடகங்கள் மேலும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்ததுடன் மருத்துவமனைகள், பள்ளிகள், அகதிகள் வாழும் சமூகங்கள் மற்றும் வறுமை நிறைந்த பகுதிகளில் அருள்சகோதரிகள் ஆற்றிவரும் பணிகளையும் சுட்டிக்காட்டினார்.
ஊடகத் துறையில் ஈடுபட்டுள்ள உலகளாவிய அருட்சகோதரிகளின் பிணைப்பை ஒன்றிணைக்கும் 'பெந்தகோஸ்து திட்டம்' (Pentecost Project) என்னும் முன்னெடுப்பைப் பற்றி சகோதரி நினா அவர்கள் எடுத்துரைத்தார்.
தொழில்முறைப் பயிற்சியும் பங்களிப்புச் செய்தித் துறையும் அருட்சகோதரிகள் தாங்கள் தொண்டாற்றும் விளிம்புநிலை மக்களோடு இணைந்து, அம்மக்களின் வாழ்க்கை அனுபவங்களை உலகறியச் செய்ய இத்திட்டம் அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறது என்றும், ஊடகங்களில் அருட்சகோதரிகளின் குரலை வலுப்படுத்துவதன் மூலம், துறவற வாழ்வின் நிலையான சாட்சியத்தை வெளிப்படுத்தவும், மிகவும் தேவையிலுள்ள மக்களோடு கூடுதல் ஒன்றிணைந்த பயணத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் முயல்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.