தேடுதல்

அருள்பணி மார்கஸ் சோலோ கெவுடா அருள்பணி மார்கஸ் சோலோ கெவுடா 

வத்திக்கானிலிருந்து புனித அருளீக்கங்களை சொந்த கிராமத்திற்குக் கொண்டுவந்த அருள்பணி மார்கஸ்

வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலிலிருந்து புனித பேதுருவின் கல்லறை மண் மற்றும் புனித நுழைவாயிலின் ஒரு கல் துண்டு ஆகிய இரண்டு அருளீக்கங்களை, பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறையில் பணியாற்றும் அருள்பணி மார்கஸ் சோலோ கெவுடா அவர்கள், இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸில் உள்ள தமது சொந்த கிராமமான லெவோரனுக்குக் கொண்டு சென்றார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உரோமில் உள்ள புனித பேதுரு பெருங்கோவிலிலிருந்து இரண்டு புனிதமான அருளீக்கங்களை (Relics) அருள்பணி மார்கஸ் சோலோ கெவுடா அவர்கள் (Fr. Markus Solo Kewuta, SVD) தனது சொந்த ஊரான இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸில் உள்ள லெவோரன் (Lewouran) கிராமத்திற்கு ஆகஸ்ட் 3, திங்களன்று கொண்டு சென்றார். இந்த நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது.

பாத்ரே மார்கோ (Padre Marco) என்று அங்குள்ள மக்களால் அன்போடு அழைக்கப்படும் அந்த அருள்பணியாளரை வரவேற்பதற்காக, புனித பேதுரு திருத்தூதர் மறைப்பணித்தள ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் கூடினர். நெசவு செய்யப்பட்ட துணி, வெற்றிலை பாக்கு மற்றும் பாரம்பரிய பானங்களை மரியாதையின் அடையாளமாக வழங்குவது உள்ளிட்ட கிழக்கு புளோரஸின் பாரம்பரிய முறைப்படியும், பிரார்த்தனைகளுடனும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறையில் பணியாற்றும் அருள்பணி மார்கஸ் அவர்கள், திருத்தூதர் புனித பேதுருவின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட மண் மற்றும் புனித பேதுரு பெருங்கோவிலின் புனித நுழைவாயிலின் ஒரு சிறு கல் துண்டு ஆகிய இரண்டு அருளீக்கங்களை அவரது கிராமத்திற்கு கொண்டு வந்தார். இவை இரண்டும் வத்திக்கானின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரச் சான்றிதழ்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த அருளீக்கங்கள் வழிபடுவதற்குரிய பொருட்கள் அல்ல" என்றும் "மாறாக கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை புனிதர்களின் சான்று வாழ்வுடனும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையுடனும் இணைக்கும் புனிதமான அடையாளங்கள் மட்டுமே"  என்றும் அவர் விளக்கினார்.

இந்த அருளீக்கங்கள் இங்கு இருப்பது என்பது, கிழக்கு புளோரஸில் உள்ள உள்ளூர் திருஅவைக்கும் உலகளாவிய திருஅவைக்கும் இடையிலான ஆழமான தொடர்பைக் குறிக்கிறது என்றும் அருள்பணி மார்கஸ் அவர்கள் கூறினார்.

ஏறத்தாழ 2001ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த ஆலயத்தை நினைவுகூர்ந்த அருள்பணி மார்கஸ் அவர்கள், அது ஒரு சிறப்புமிக்க இறைவேண்டல் மற்றும் திருப்பயண மையமாக உருவெடுக்க வேண்டும் என்பது தமது நீண்டகால விருப்பமாக இருந்து வருவதாகக் கூறினார். இங்கு வழங்கப்படும் அருளீக்கங்கள், ஆன்மிகப் புதுப்பித்தல், உறுதியான இறைநம்பிக்கை, சகோதரத்துவம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் என்றும், லெவோரன் கிராமத்தை திருப்பயணிகளுக்கும் இறைமக்களுக்கும் நம்பிக்கையின் மையமாக மாற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

05 ஆகஸ்ட் 2026, 14:49