தேடுதல்

2025 நவம்பரில் நடைபெற்ற முப்பத்து மூவரின் அன்னை மரியாள் திருத்தல தேசிய திருப்பயணம் 2025 நவம்பரில் நடைபெற்ற முப்பத்து மூவரின் அன்னை மரியாள் திருத்தல தேசிய திருப்பயணம் 

நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் புதுப்பிக்கும் திருத்தந்தையின் உருகுவே பயணம்!

நவம்பர் 6 முதல் 8 வரை உருகுவேவுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், நம்பிக்கை, எதிர்நோக்கு, அமைதி மற்றும் புதுப்பித்தலுக்கான தருணமாக அமையும் என்று உருகுவே ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் மில்டன் ட்ரோகோலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

இந்த ஆண்டு நவம்பர் 6 முதல் 8 வரை தென் அமெரிக்க நாடான உருகுவேக்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், இறையருள், எதிர்நோக்கு மற்றும் புதுப்பித்தலுக்கான தருணமாகக் கருதி அங்குள்ள உள்ளூர் திருஅவை திருத்தந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறது.

இந்தத் திருத்தூதுப் பயணம் குறித்து பேசிய உருகுவே ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் மில்டன் ட்ரோகோலி அவர்கள், திருத்தந்தையின் இந்தப் பயணம், கத்தோலிக்கர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கவும் உதவும் விலைமதிப்பற்ற கொடை என்று குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் வருகை, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களைத் தொடர்ந்து நற்செய்தியை அறிவிக்கத் தூண்டும் என்றும், நாடு முழுவதற்கும் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் செய்தியை வழங்கும் என்றும் ஆயர் கூறியுள்ளார்.

நவீன உலகுடனான உரையாடலில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் மதச்சார்பற்ற நாடுகளில் ஒன்றான உருகுவேவுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மரியாதை, சேவை மற்றும் உரையாடல் ஆகியவற்றின் வழியாக திருஅவை தனது கிறிஸ்தவச் சாட்சியை வழங்குவதற்கு முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களுக்குப் பிறகு, உருகுவே நாட்டிற்கு வருகை தரும் இரண்டாவது திருத்தந்தையான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இந்தப் பயணம் உள்ளூர் திருஅவைக்கும் உரோமைத் திருஅவைக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும்" என்றும் ஆயர் மில்டன் ட்ரோகோலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 8ஆம் நாள் உருகுவேயின் பாதுகாவலரான “முப்பத்து மூன்று புனிதர்களின் அன்னை” திருவிழாவில் திருத்தந்தை பங்கேற்பது, அவரது திருத்தூதுப் பயணத்தின் முக்கியச் சிறப்பம்சமாக அமையும் என்று ஆயர் ட்ரோகோலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த மரியன்னை விழா மக்களின் பக்தியைப் புதுப்பித்து, நாட்டின் கிறிஸ்தவ வேர்களை வலுப்படுத்தி, நம்பிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட எதிர்நோக்குடன் வாழவும், நற்செய்தி அறிவிப்புப் பணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படவும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஆகஸ்ட் 2026, 13:31