புனித பூமியில் அமைதிக்காக ஏங்கும் கிறிஸ்தவர்கள்: கர்தினால் Pizzaballa
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
"புனித பூமியில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒருபோதும் நிறைவேற்றப்படாத தொடர்ச்சியான அமைதிக்கான வாக்குறுதிகளால் சோர்வடைந்துள்ளனர்" என்று எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறையின் முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa அவர்கள் தெரிவித்தார்.
“நட்பு மற்றும் நம்பிக்கைக்கான உலகளாவிய இல்லத்தின்” திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இத்தாலியின் அசிசிக்கு சென்றிருந்தபோது, கர்தினால் Pizzaballa அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அப்பகுதியின் தற்போதைய நிலைமையை "போரும் இல்லை, அமைதியும் இல்லை" என்று விவரித்த அவர், " காஸா, மேற்குக் கரை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் வன்முறை தொடர்ந்து அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றும் தெரிவித்தார்.
மேலும், “தொடர்ந்து ஏற்படும் ஏமாற்றங்கள் மக்கள் மத்தியில் ஆழமான அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன” என்றும், இதனால் “உண்மையாகவே நல்ல செய்திகள் கிடைக்கும்போதுகூட, அவற்றை நம்புவது மக்களுக்கு கடினமாகியுள்ளது” என்றும் கர்தினால் கவலை தெரிவித்தார். இருப்பினும், உரையாடல், நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து உழைக்கும் இளைஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வழியாக நம்பிக்கையின் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த காஸாவில் உள்ள திருக்குடும்பப் பங்குத்தளம் (Holy Family Parish) குறித்துப் பேசிய கர்தினால் Pizzaballa அவர்கள், 541 பேர் கொண்ட அந்தச் சமூகம் படிப்படியாக மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருவதாகக் கூறினார். பள்ளியை மீண்டும் திறப்பது, மருத்துவ மையத்தை இயக்குவது மற்றும் அர்ப்பணிப்புள்ள அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகள் மூலம் குழந்தைகளுக்கான தேவைகளை வழங்குவது ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும்.
புனித பூமியின் மீது திருத்தந்தை அவர்கள் கொண்டுள்ள நெருக்கத்தைப் போற்றிய அவர், மேலும் சூழல் அமைதியானதும் திருத்தந்தையின் வருகை குறித்த தனது எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.
வரவிருக்கும் 1986-ஆம் ஆண்டு அசிசியில் இடம்பெற்ற பல்சமய இறைவேண்டல் கூட்டத்தின் 40-வது ஆண்டு நிறைவைக் குறித்து எடுத்துக்காட்டிய அவர், அது வெறுமனே கடந்த காலத்தின் நினைவாக இல்லாமல், புதுப்பிக்கப்பட்ட உரையாடல் மற்றும் அமைதிக்கான ஒரு தொடக்கப் புள்ளியாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.