தேடுதல்

லா வாங் அன்னை மரியா திருத்தலம். லா வாங் அன்னை மரியா திருத்தலம். 

லா வாங் அன்னை திருத்தலத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் திருப்பயணம்

வியட்நாமின் ஹூவே உயர் மறைமாவட்டத்தில் உள்ள லா வாங் அன்னை தேசிய திருத்தலத்தில், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெற்ற 32-வது தேசிய லா வாங் திருப்பயண மாநாட்டில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் பங்கேற்றனர். “அன்னை மரியாள், நற்செய்தியின் தூதர்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இத்திருப்பயணம், மரியாவின் வழியாக கிறிஸ்துவின் அன்பை பிறருக்கு எடுத்துச் செல்லவும், உண்மையான சீடர்களாகவும் மறைப்பணியாளர்களாகவும் வாழவும் அழைப்பு விடுத்தது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்  

வியட்நாமில் ஹூவே உயர் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள லா வாங் அன்னை தேசிய திருத்தலத்தில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இடம்பெற்ற 32-வது தேசிய லா வாங் திருப்பயண மாநாட்டில் வியட்நாம் முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் உள்ள வியட்நாமிய சமூகங்களிலிருந்தும் 200,000-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் பங்கேற்றனர்.

"அன்னை மரியாள், நற்செய்தியின் தூதர்" என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்தத் திருப்பயணம், இறைமக்கள் அன்னை மரியாவை அன்பான அன்னையாக அணுகவும், ஆறுதலைத் தேடும் அதே வேளையில் உண்மையான சீடர்களாகவும் மறைப்பணியாளர்களாகவும் மாற அழைப்பு விடுத்தது.

பாரிஸ் வெளிநாட்டு மறைப்பணியைச் சேர்ந்த வியட்நாமிய அருள்பணியாளரான லேண்ட்ரி வாரேன் அவர்கள், வியட்நாமிய கத்தோலிக்க வாழ்க்கையில் இந்தத் திருப்பயணத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, லா வாங் ஒரு "வியட்நாமின் லூர்து நகர் திருத்தலம்" என்று விவரித்தார்.

"இந்த பக்தி முயற்சி 1798-ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிலவிய கடுமையான துன்புறுத்தலின் போது தொடங்கியது" என்றும் "துன்புறுத்தலிலிருந்து தப்பிய கத்தோலிக்கர்கள் லா வாங்கின் காடுகளில் அடைக்கலம் புகுந்தனர்" என்றும் கூறிய அவர் "பாரம்பரிய நம்பிக்கையின்படி, அன்னை மரியா ஒரு ஆலமரத்தின் அடியில் தோன்றி, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, அவர்களின் செபங்களைக் கேட்டதாக உறுதியளித்தார்" என்றும் எடுத்துக்காட்டினார்.

இன்று, லா வாங் அன்னை "அடைக்கல‌ அன்னை" என்றும் ஆழமாக நேசிக்கப்படுகிறார். இங்கு வரும் திருப்பயணிகள் செபமாலை செபித்தல், திருப்பலியில் பங்கேற்றல், ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுதல் மற்றும் சிலுவைப் பாதை மற்றும் இறைஇரக்கத்தின் நேரத்தில் பங்கேற்றல் ஆகிய பக்தி முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

நற்செய்தி அறிவிப்புப் பணியை  வலியுறுத்தும் இந்தத் திருப்பயணம், மரியாவின் தூண்டுதலால், கத்தோலிக்கர்கள் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்குக் கொண்டு செல்லவும், முழுமையான கத்தோலிக்கராகவும் முழுமையான வியட்நாமியராகவும் வாழ முடியும் என்பதற்கு சான்றாக விளங்கவும் திருப்பயணிகளை ஊக்குவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஆகஸ்ட் 2026, 14:43