தேடுதல்

‘Mission Possible’ ஹேக்கத்தான் ‘Mission Possible’ ஹேக்கத்தான் 

தாய்லாந்தில் இளைஞர்களின் புதுமை முயற்சி: ‘Mission Possible’ ஹேக்கத்தான்

தாய்லாந்தில் நடைபெற்ற மூன்றாவது ‘Mission Possible’ இளைஞர் ஹேக்கத்தான் போட்டியில், கத்தோலிக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 70 மாணவர்கள் பங்கேற்று சமூகப் பிரச்சினைகளுக்கான புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கினர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

தாய்லாந்து முழுவதும் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 70 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, ‘சாத்தியமான இலக்கு’ (Mission Possible) என்ற மூன்றாவது இளைஞர் ஹேக்கத்தான் (Hackathon) போட்டி, ஜூலை 25 முதல் 27 வரை ஹுவா ஹின் நகரில் நடைபெற்றது. “ஒன்றிணைந்து மேம்பட்ட உலகை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், குறுகிய காலத்தில் புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் சவாலை மாணவர்கள் ஏற்றனர்.

தாய்லாந்தின் கத்தோலிக்க கல்விக் குழு மற்றும் லிகாஸ் செய்தி (LiCAS News) நிறுவனம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஆக்கபூர்வமான யோசனைகளை நடைமுறை சமூக முன்முயற்சிகளாக மாற்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, ‘கிளாஸ் ஹார்ப்’ (Glass Harp) எனப்படும் இசைக்கருவியில் இசைக் கலைஞர் வீராபோங் தாவீசாக் (Weerapong Taweesak) வழங்கிய இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் கோப்பைகளின் விளிம்புகளை ஈரமான விரல்களால் வருடி இனிமையான இசையை உருவாக்கிய அவர், கலை மனித இதயங்களைத் திறந்து, ஆழமாகக் கேட்கும் மற்றும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை எவ்வாறு வளர்க்கிறது என்பதை தனது இசையின் மூலம் வெளிப்படுத்தினார்.

சிறைச்சாலைகளில் தான் இசை நிகழ்ச்சி நடத்திய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், 'இசை நம்பிக்கையை வளர்க்கிறது' என்றும் 'உண்மையான மனிதத் தொடர்புகளுக்கான தளத்தை உருவாக்குகிறது' என்றும் விளக்கினார்.

கத்தோலிக்கப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இந்த ஹேக்கத்தானில் பல மதப் பின்னணிகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக பௌத்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். ஒருமித்த உணர்வால் ஒன்றிணைந்த பங்கேற்பாளர்கள், செவிசாய்த்தல், ஒத்துழைப்பு மற்றும் சமூகத்திற்கான பகிரப்பட்ட பொறுப்பு ஆகிய விழுமியங்களை ஆராய்ந்தனர்.

வழிகாட்டிகள் தங்களின் மீள்திறன், இரக்கம் மற்றும் நம்பிக்கை சார்ந்த தனிப்பட்ட கதைகளின் மூலம் மாணவர்களை ஊக்குவித்த அதே வேளையில், தொழில்முறை பயிற்சியாளர்கள் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளை உருவாக்க பங்கேற்பாளர்களுக்கு உதவினர். பன்னிரண்டு அணிகள் தங்கள் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்படும் ஆரம்ப நிதியுதவிக்காக (seed funding) தங்கள் திட்டங்களை முன்வைத்தன.

நிதியுதவி பெறுவது வெறும் பரிசு அல்ல, மாறாக பிறருக்கு சேவை செய்வதற்கான ஒரு பொறுப்பு என்பதை ஏற்பாட்டாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினர். புதுமையையும் இரக்கத்தையும் இணைத்த இளைஞர்கள், கவனமாகச் செவிமடுத்தல் மற்றும் பகிரப்பட்ட அறிவின் மூலம் மேலும் நீதியான, அமைதியான, அன்புமிக்க உலகை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஆகஸ்ட் 2026, 14:10