தேடுதல்

மங்கோலியா மங்கோலியா 

மங்கோலியாவில் பாலைவனமாதல் அதிகரிப்பு: கிராமப்புற மக்களுக்கு அச்சுறுத்தல்

மங்கோலியாவில் அதிகரித்து வரும் பாலைவனமாதல், கிராமப்புற சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் அச்சுறுத்துவதாக காரித்தாஸ் மங்கோலியாவின் நிர்வாக இயக்குநர் அருள்சகோதரி சாண்ட்ரா காரே தெரிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மங்கோலியா முழுவதும் பாலைவனமாதல் அதிகரித்து வருவதாகவும், இது கிராமப்புற சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் அச்சுறுத்துவதாகவும் கான்சோலாட்டா சபையைச் சேர்ந்தவரும், காரித்தாஸ் மங்கோலியாவின் நிர்வாக இயக்குநருமான அருள்சகோதரி சாண்ட்ரா காரே அவர்கள் தெரிவித்துள்ளார்.

மங்கோலியா நாட்டின் தலைநகரமான உலான்பாதரில் இடம்பெற்ற பாலைவனமாதலுக்கு எதிரான ஐ.நா மாநாட்டில் (COP17) பேசிய அருள்சகோதரி காரே அவர்கள், புல்வெளிகள் மறைந்து வருவதாகவும், நீர்நிலைகள் வற்றி வருவதாகவும், நிலம் வறண்டு போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். "காலநிலை மாற்றம், வறட்சி, தீவிர வானிலை மற்றும் அதிகப்படியான மேய்ச்சல், காடழிப்பு, தவறான நிலப் பயன்பாடு உள்ளிட்ட நிலையற்ற மனித செயல்பாடுகள் இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்குகின்றன" என்றும் அவர் கூறியுள்ளார்.

பாலைவனமாதலுக்கு எதிரான ஐ.நா ஒப்பந்தத்தின்படி (UNCCD), மங்கோலியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 77 விழுக்காடு நிலம் அதன் வளம் குறைதல் மற்றும் பாலைவனமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை பெரிதும் நம்பியிருக்கும் மேய்ச்சல் சமூகங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 2023-2024 ஆம் ஆண்டின் கடுமையான "ஜுட்" (dzud) குளிர் காலத்தில் ஏறத்தாழ 79 இலட்சம் விலங்குகள் உயிரிழந்துள்ளன. இது நாட்டின் கால்நடைகளில் ஏறத்தாழ 12.3 விழுக்காடு ஆகும்.

"சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மக்களை வறுமையிலிருந்து பாதுகாப்பதாகும்"  என்று சகோதரி காரே அவர்கள் வலியுறுத்தியுள்ளார். காரித்தாஸ் மங்கோலியா அமைப்பு, நிலையான விவசாயம், நீர் பாதுகாப்பு, காடழிப்பு தடுப்பு மற்றும் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கான மாற்று வாழ்வாதாரங்களை ஊக்குவித்தல் ஆகிய தொண்டு செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், வளம்குன்றிய நிலத்தை மீட்டெடுக்கவும், மண்ணின் ஈரப்பதத்தை உயர்த்தவும், தாவரங்களை மீண்டும் வளர்க்கவும் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த செலவிலான, பழங்கால நீர் சேகரிப்பு முறையான "பிறை" (crescent) நுட்ப சோதனையையும் நடத்தி வருகிறது.

"நிலத்தைப் பராமரிப்பது என்பது மக்களைப் பராமரிப்பதாகும்" என்று கூறும் அருள்சகோதரி காரே அவர்கள், "பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவது என்பது மங்கோலியாவின் சுற்றுச்சூழலையும் ஆயிரக்கணக்கான கிராமப்புற குடும்பங்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கு மிகவும் அவசியமானது" என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஆகஸ்ட் 2026, 13:33