தேடுதல்

தலைமைப் பேராயரான ஸ்வியாடோஸ்லாவ் ஷெவ்சுக் தலைமைப் பேராயரான ஸ்வியாடோஸ்லாவ் ஷெவ்சுக் 

உக்ரைனுக்காக புதுப்பிக்கப்பட்ட ஒருமைப்பாட்டுக்கும் இறைவேண்டலுக்கும் பேராயர் ஷெவ்சுக் அழைப்பு

உக்ரைன் சுதந்திரமடைந்து 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து இடம்பெறும் போருக்கு மத்தியில் ஒருமைப்பாடு, இறைவேண்டல் மற்றும் பொறுப்புணர்வுடன் சுதந்திரத்தைப் பாதுகாக்க உக்ரேனிய கிரேக்கக் கத்தோலிக்க திருஅவையின் தலைமைப்பேராயர் ஸ்வியாடோஸ்லாவ் ஷெவ்சுக் அழைப்பு விடுத்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உக்ரைன் சுதந்திரமடைந்து 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வேளையில், உக்ரேனிய கிரேக்கக் கத்தோலிக்க திருஅவையின் தலைமைப்பேராயரான ஸ்வியாடோஸ்லாவ் ஷெவ்சுக் அவர்கள், அங்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் போருக்கு மத்தியில் புதுப்பிக்கப்பட்ட ஒருமைப்பாட்டிற்கும் இறைவேண்டலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

வத்திக்கான் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர், இந்த ஆண்டு ஜூலை மாதமே மிகவும் இரத்தம் தோய்ந்த மாதமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

நகரங்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்த அவர், அதிநவீன ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் பயன்பாடு தீவிரமான அறநெறி மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது என்றும் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, தாக்குதலை மேற்கொள்பவர்கள் தங்கள் இலக்குகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும் என்பது மேலும் கவலைக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரம் என்பது கடவுள் அளித்த கொடை என்றும், மனித மாண்பு, பொது நலன் மற்றும் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு பொறுப்பு என்றும் கூறிய பேராயர் ஷெவ்சுக் அவர்கள், தாயகத்தின் மீதான அன்பு ஒருபோதும் மற்றவர்கள் மீதான வெறுப்பாக மாறக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சோவியத் சர்வாதிகார ஆட்சியின் கீழான தனது அனுபவத்தை மேற்கோள்காட்டிய பேராயர் அவர்கள், உண்மையான சுதந்திரம் என்பது வெறும் விருப்பத் தேர்வை விட மேலானது என்றும் "அது மற்றவர்களின் மீதான பொறுப்புணர்வுடன், உண்மையானதையும் நல்லதையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

“சுதந்திரமாக இருப்பதில் சலிப்படைய வேண்டாம்” என்று உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பேராயர், தனிப்பட்ட பொறுப்பிலிருந்து விலகுவது மக்களாட்சியைப் பலவீனப்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்ததுடன் மனித மாண்பையும் மக்களாட்சி விழுமியங்களையும் பாதுகாப்பதில் திருஅவைக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 24ஆம் நாள், உக்ரைனிய திருஅவைத் தலைவர்களும் சமயப் பிரதிநிதிகளும் கீவ் நகரிலுள்ள புனித சோபியா பேராலயத்தில், கைகளை உயர்த்தி மன்றாடும் புனித கன்னி மரியாவின் பழமையான சிறு வண்ணக் கற்சித்திரத்தின் முன், உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி சிறப்பு இறைவேண்டலில் ஒன்றுகூட உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஆகஸ்ட் 2026, 15:05