தேடுதல்

குறள்வழி இறைமொழி குறள்வழி இறைமொழி 

குறள்வழி இறைமொழி

கற்பு என்னும் உறுதியான அடித்தளத்தின் மீது குடும்ப வாழ்வைக் கட்டியெழுப்புவோம். கணவனும் மனைவியும் அன்பு, நம்பிக்கை, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் இணைந்து வாழ்ந்து, ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

“குறள்வழி இறைமொழி” நிகழ்ச்சியில் இன்றைய சிந்தனைக்கான 54ஆம் திருக்குறளை எடுத்துக்கொள்வோம்:

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண்டாகப் பெறின்.”

ஒரு பெண்ணிடம் இருக்கக்கூடிய சிறப்புகளில், கற்பு என்னும் உறுதியான பண்பைக் காட்டிலும் உயர்ந்தது வேறு எதுவுமில்லை என்பதே இக்குறளின் பொருள். கற்பு என்பது வெறுமனே ஒரு கட்டுப்பாடு அல்ல. அது உறுதி, ஒழுக்கம், நேர்மை, நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் முழுமையான அன்பு ஆகிய பண்புகளை உள்ளடக்கியது. ஆண், பெண் இருவருமே இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். எனவே, ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் அல்ல. இருவரும் இணைந்து வாழ்வை உருவாக்க அழைக்கப்பட்டவர்கள். கற்பு என்னும் சொல்லில் இடம்பெறும் “கல்” என்ற கருத்தை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். கல் என்பது உறுதியையும் நிலைத்தன்மையையும் குறிக்கிறது. அதனால்தான் இயேசு, பேதுருவிடம், “இந்தப் பாறையின் மீது என் திருச்சபையைக் கட்டுவேன்” என்று கூறுகிறார். பாறையின் மீது கட்டப்பட்ட வீடு உறுதியாக நிலைத்திருப்பதைப் போல, கணவனும் மனைவியும் தங்களது இல்லற வாழ்வை நம்பிக்கை, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டியெழுப்ப வேண்டும்.

நீதிமொழிகள் நூலும் மாண்புடைய பெண் தனது கணவனுக்கு மகுடமாக இருப்பதாக எடுத்துரைக்கிறது. அதேபோல், மாண்புடைய கணவன் தனது மனைவிக்கு மணிமுடியாக இருக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு துணையாக இருந்து, இறைவனின் திட்டத்திற்கு ஏற்ப இணைந்து வாழ வேண்டும். இறைவன் இணைத்த இந்தத் திருமண உறவு, அவர்களுக்கு மட்டுமல்ல; அவர்களின் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நன்மையையும் மீட்பின் பாதையையும் வழங்கும் ஓர் அருட்கொடையாக அமைகிறது. இன்றைய உலகில் கற்பு, நம்பிக்கை, நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு போன்ற உயரிய பண்புகள் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்றைய திருக்குறள் ஒரு முக்கியமான அழைப்பை வழங்குகிறது.

கற்பு என்னும் உறுதியான அடித்தளத்தின் மீது குடும்ப வாழ்வைக் கட்டியெழுப்புவோம். அன்பிலும், நம்பிக்கையிலும், உண்மையிலும் ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஆகஸ்ட் 2026, 13:55