தேடுதல்

குறள்வழி இறைமொழி குறள்வழி இறைமொழி 

குறள்வழி இறைமொழி

ஒரு குடும்பத்தின் உண்மையான செல்வம் பொருள் அல்ல; நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கைத்துணையே அதன் மிகப்பெரிய வளம்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

"குறள்வழி இறைமொழி" நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பும் நன்றியும் கலந்த வாழ்த்துகள். இல்லற வாழ்க்கையைப் பற்றிக் கூறும் திருக்குறளின் "வாழ்க்கைத் துணைநலம்" என்ற அதிகாரத்தை தொடர்ந்து சிந்தித்து வருகிறோம். இன்று நாம் சிந்திக்கவிருக்கும் திருக்குறள்:

"இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை." (திருக்குறள் – 53)

இந்தக் குறள் கூறும் ஆழமான உண்மை என்ன?

ஒரு இல்லத்தில் வாழும் மனைவி அறிவு, ஒழுக்கம், கற்பு, அன்பு, பொறுப்பு, பெரியோரை மதிக்கும் பண்பு, பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கும் அர்ப்பணிப்பு ஆகிய நற்பண்புகளால் நிறைந்தவராக இருந்தால், அந்த இல்லத்திற்கு வேறு எந்தச் செல்வமும் தேவையில்லை. அந்த இல்லத்தில் எல்லா வளங்களும் இருப்பதாகவே வள்ளுவர் கூறுகிறார். அதே நேரத்தில், மனைவிக்கு இந்த மாண்புகள் இல்லையென்றால், அந்த இல்லத்தில் எவ்வளவு பொருளாதார வசதிகள் இருந்தாலும், அந்த வாழ்க்கையில் உண்மையான நிறைவு இருக்காது. இதைத்தான் வள்ளுவர், "உள்ளதென் இல்லவள் மாணாக் கடை" என்று கூறுகிறார். இந்தக் குறள் மனைவியைப் பற்றிக் கூறினாலும், இன்றைய குடும்பச் சூழலில் இதை கணவனுக்கும் பொருத்திப் பார்க்கலாம். குடும்பத்தின் உயர்வு என்பது ஒருவரின் பொறுப்பு மட்டுமல்ல; கணவனும் மனைவியும் இணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு. இருவரும் மாண்பும் நற்பண்பும் கொண்டவர்களாக இருந்தால்தான் குடும்பம் உறுதியாகவும் மகிழ்ச்சியாகவும் வளரும்.

திருவிவிலியமும் இதையே வலியுறுத்துகிறது. சீராக் நூலில், "நல்ல மனைவி ஆண்டவரிடமிருந்து கிடைக்கும் மிகச் சிறந்த கொடை" என்று கூறப்படுகிறது. நல்ல வாழ்க்கைத்துணை என்பது இறைவனின் அருள்கொடை. அதேபோல், கணவனும் மனைவியும் இருவரும் மதிப்பிற்குரியவர்களாக வாழ வேண்டும். குடும்பத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் அவர்களின் நடத்தை முன்மாதிரியாக இருக்க வேண்டும். தீய பழக்கங்கள், ஒழுக்கமற்ற வாழ்க்கை, பெரியோரை மதிக்காத மனப்பான்மை ஆகியவை குடும்பத்தின் மாண்பைக் குறைக்கின்றன. எனவே, இறையச்சம் நிறைந்த குடும்பத்தை உருவாக்க வேண்டுமானால், கணவனும் மனைவியும் மாண்பும் நற்பண்பும் கொண்டவர்களாக வாழ வேண்டும். அத்தகைய இல்லங்களில்தான் இறையாட்சி மலர்கிறது.

இன்றைய சிந்தனையை மீண்டும் ஒருமுறை திருக்குறளுடன் நிறைவு செய்வோம்:

"இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை."

இந்த இறைமொழியும் திருக்குறளும் நம் குடும்ப வாழ்வை வழிநடத்த இறைவன் அருள்புரிவாராக.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஆகஸ்ட் 2026, 14:19