இன்றைய புனிதர்
புனித தோமினிக் சாமிநாதர்
திரு. பிலோமி அலெக்ஸ்
ஆகஸ்ட் 8ஆம் நாள், திருஅவை புனித தோமினிக் சாமிநாதரின் திருவிழாவைக் கொண்டாடுகிறது.ஸ்பெயின் நாட்டில் கிபி 1170ஆம் ஆண்டு, பெலிக்ஸ் மற்றும் ஜோவன்னா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் தோமினிக் சாமிநாதர். இறை பக்தியுடன் வளர்ந்த இவர், குருவாக வேண்டும் என்ற விருப்பத்துடன் கிபி 1191ஆம் ஆண்டு புனித அகுஸ்தினார் துறவறச் சபையில் இணைந்து குருவானார். அதே ஆண்டில் ஸ்பெயினில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது, தம்மிடமிருந்த சொத்துகள் அனைத்தையும் விற்று, பசியால் வாடிய மக்களுக்கு உணவளித்தார். ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போர்மீது அவர் கொண்டிருந்த அன்பு, அவரது வாழ்வின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்தது.காலத்தின் தேவைக்கேற்ப புதிய துறவறச் சபையைத் தொடங்கத் திட்டமிட்ட அவர், கிபி 1215ஆம் ஆண்டு போதகர் துறவறச் சபையை நிறுவினார். பெண்களுக்காகவும் தனித்துறவறச் சபையைத் தொடங்கினார். புனித அகுஸ்தினார் துறவறச் சபையின் விதிமுறைகளைத் தமது சபையின் வாழ்வியல் விதிகளாக ஏற்றுக்கொண்டார்.
பிரான்சில் பரவியிருந்த அல்பிஜென்சியக் கொள்கையை எதிர்த்து, அந்தக் கொள்கையைப் பின்பற்றிய மக்களுடன் உரையாடி, அவர்களுக்கு திருஅவையின் போதனைகளை எடுத்துரைத்தார். எளிய மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதற்காகப் பணியாற்றிய அவர், நற்செய்தியை அறிவிப்பதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். “இறைவா, உமது இரக்கத்தை என் மீது திருப்பியருளும்” என்று தொடர்ந்து செபித்து, மக்களுக்குச் சேவை செய்த புனித தோமினிக் சாமிநாதர், கிபி 1221ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் நாள் இறையடி சேர்ந்தார். பின்னர், திருத்தந்தை ஒன்பதாம் கிரெகோரி அவர்களால் கிபி 1234ஆம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டார்.
புனித தோமினிக் சாமிநாதரின் திருவிழாவைக் கொண்டாடும் நாம், ஏழ்மையிலும் துன்பத்திலும் வாடும் மக்கள் அனைவருக்கும் இறைவன் துணைநின்று, அவர்களின் வாழ்வில் நம்பிக்கையையும் வளத்தையும் வழங்க வேண்டுமென்று இறைவனை நோக்கி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.