இன்றைய புனிதர்
புனித திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ்
திரு. பிலோமி அலெக்ஸ்
ஆகஸ்ட் 7ஆம் நாள், புனித திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் அவர்களின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கிரேக்க நாட்டைச் சேர்ந்த திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் அவர்கள், கி.பி. 257ஆம் ஆண்டு திருஅவையின் 24ஆம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். பல்வேறு கருத்து வேறுபாடுகளும், துன்பங்களும் நிறைந்திருந்த அக்காலச் சூழலில், திருஅவையை ஞானத்துடனும் துணிவுடனும் வழிநடத்தினார். பிற தெய்வங்களை வழிபட்டதால் திருஅவையிலிருந்து விலகியிருந்த கிறிஸ்தவர்களை மன்னித்து, அவர்களை மீண்டும் திருஅவையில் ஏற்றுக்கொண்டார். உரோமைப் பேரரசர் வலேரியன் காலத்தில் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் அளித்து, அவர்களது கிறிஸ்தவ விசுவாசத்தை வலுப்படுத்தினார். அக்காலத்தில், கிறிஸ்தவக் குருக்கள் சிலைகளுக்குப் பலியிட வேண்டும் என்றும், குருக்களும் கிறிஸ்தவர்களும் கொடூரமாகத் துன்புறுத்தப்பட வேண்டும் என்றும் பேரரசர் வலேரியன் அரசாணைகளைப் பிறப்பித்தார். இந்த அரசாணைகளைத் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் அவர்கள் துணிவுடன் எதிர்த்தார். அரசின் துன்புறுத்தல்களுக்கு மத்தியில், குருக்கள் வழியாக கிறிஸ்தவர்களைப் பாதுகாத்ததுடன், அவர்கள் மறைமுகமாகத் திருவழிபாடுகளில் பங்கேற்கவும் வழிவகுத்தார். உரோமைப் பேரரசின் அநீதியான கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திற்காகத் துணிவுடன் உழைத்தார்.
இறுதியில், கி.பி. 258ஆம் ஆண்டு, கிறிஸ்தவ விசுவாசத்தைக் கைவிட மறுத்ததற்காகத் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் அவர்கள் தலைவெட்டப்பட்டு மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டார். கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கையுடன், திருஅவையைத் துணிவுடனும் நேர்மையுடனும் வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் அவர்களை திருஅவை புனிதராக உயர்த்தியது. அவரது திருநாளைக் கொண்டாடும் நாம், எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நமது விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும், துணிவுடன் வாழவும் இறைவனிடம் அருள் வேண்டி செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.