இன்றைய புனிதர்
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி
திரு. பிலோமி அலெக்ஸ்
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் அருகிலுள்ள மரியானெல்லா (Marianella) பகுதியில், வசதிமிக்க குடும்பத்தில் கி.பி. 1696 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று பிறந்தார். இளமையிலேயே சிறந்த கல்வி கற்ற அவர், சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். ஆனால் உலகப் புகழும் செல்வமும் நிலையானவை அல்ல என்பதை உணர்ந்த அவர், தமது வாழ்க்கையை முழுமையாக இறைவனுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதன்படி, 1726 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். நேப்பிள்ஸ் நகரில் ஏழைகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். குறிப்பாக, குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்து, அவர்களை இறைநம்பிக்கையில் வளர்த்தார். ஏழைகள் மற்றும் கைவிடப்பட்ட மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காக ஒரு புதிய துறவறச் சபையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில், 1732 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று இரட்சகர் (Congregation of the Most Holy Redeemer – Redemptorists) துறவறச் சபையை நிறுவினார். நற்செய்தி அறிவித்தலும், ஏழை மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதுமே இச்சபையின் முதன்மை நோக்கமாக அமைந்தது. தமது ஆழமான மறையுரைகளாலும், இறையியல் எழுத்துக்களாலும் திருஅவைக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய அவர், 1762 ஆம் ஆண்டு சாந்த் அகாதா டெய் கோதி (Sant'Agata dei Goti) மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.
"கடவுளின் அருள் வல்லமையுடையது; அதனை ஏற்றுக்கொள்பவர்கள் மீட்பைப் பெறுவர்" என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்த புனித அல்போன்ஸ், இறையியல், அறவியல் மற்றும் ஆன்மிக வாழ்வு குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மரியாவின் மகிமைகள் (The Glories of Mary), மீட்பின் வழி (The Way of Salvation), கிறிஸ்துவின் உண்மை மணவாழ்வு உள்ளிட்ட பல நூல்கள் இன்றளவும் ஆன்மிக வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. புனித அல்போன்ஸ் மரிய லிகோரி 1787 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று இறைவனடி சேர்ந்தார். பின்னர் 1839 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார். மேலும், 1871 ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்களால் திருஅவையின் மறைவல்லுநராக (Doctor of the Church) அறிவிக்கப்பட்டார்.
புனித அல்போன்ஸ் மரிய லிகோரியின் திருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், மீட்பரின் திருச்சபை (Redemptorists) உறுப்பினர்களுக்காகவும், அவர்கள் உலகம் முழுவதும் ஆற்றிவரும் நற்செய்தி அறிவிப்பு மற்றும் ஏழை மக்களுக்கான பணிகளுக்காகவும் இறைவனிடம் உருக்கமுடன் செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.