இயேசுவின் காலத் தொழுகைக்கூடம் குறித்த புதிய தொல்பொருள் சான்றுகள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
கலிலேயாக் கடலின் வடமேற்கு கரையில் அமைந்துள்ள கப்பர்நாகும் நகரம், கலிலேயாவில் இயேசு பணி செய்த போது பெரும்பாலான தருணங்களில் அவரது வீடாக மாறியது. மத்தேயு நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது போல், இயேசு நாசரேத்தை விட்டு வெளியேறி கப்பர்நாகுமைத் தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டார். இதன் மூலம் கலிலேயாவில் ஒரு பெரிய ஒளி பிரகாசிக்கும் என்ற எசாயாவின் முன்னறிவிப்பை அவர் நிறைவேற்றினார்.
பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் மற்றும் மத்தேயு உள்ளிட்ட தனது முதல் சீடர்களை இயேசு இங்கே தான் தேர்ந்து கொண்டார். அவர் யூதர்களின் தொழுகைக் கூடத்தில் போதித்தார், நோயாளிகளைக் குணப்படுத்தினார், தீய ஆவிகளைத் துரத்தினார், மேலும் தான் மெசியா மற்றும் கடவுளின் மகன் என்பதை வெளிப்படுத்தும் பல அடையாளங்களை இங்கேதான் செய்தார்.
பிரான்சிஸ்கன் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பேதுருவின் வீடு உள்பட பல முக்கியமான சுவடுகளை கண்டுபிடித்துள்ளன, இது பின்னர் ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத் தலமாகவும், இறுதியில் ஒரு பைசண்டைன் ஆலயமாகவும் மாற்றப்பட்டது.
“தற்போதுள்ள ‘வெள்ளைத் தொழுகைக்கூடத்தின்’ (White Synagogue) அடியில் இருந்த பழமையான சுவடுகளையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவை இயேசுவின் காலத்தில் இருந்த தொழுகைக்கூடத்தின் பகுதிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.”
பைசண்டைன் காலகட்டத்தில் கப்பர்நகூமில் கிறிஸ்தவ மற்றும் யூத சமூகங்கள் ஒன்றோடொன்று இணக்கமாக வாழ்ந்ததையும் இந்தக் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்று, பிரான்சிஸ்கன் சபையினர் பராமரித்து வரும் புனித பூமியானது, இந்தப் புனிதத் தலத்திற்கு வரும் திருப்பயணிகளை வரவேற்கிறது.
கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, கப்பர்நாகும் ஒரு தொல்பொருள் இருப்பிடத்தை விட மேலானது—அது "இயேசுவின் நகரம்" என்று நினைவுகூரப்படுகிறது, அங்கு அவரது வார்த்தைகள், அற்புதங்கள் மற்றும் சந்திப்புகள் ஆகியவை தொடர்ந்து கிறிஸ்தவ நம்பிக்கையை ஊக்குவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.