காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பரவலுக்கு மத்தியிலும் செயல்பாட்டிற்கு வரும் கத்தோலிக்கப் பள்ளிகள்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
தொடர்ச்சியான பாதுகாப்பற்ற சூழல் மற்றும் தீவிர எபோலா பரவல் நிகழும் போதிலும், காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் 2026–2027 ஆம் கல்வி ஆண்டிற்குத் தயாராகி வருகின்றன. நாடு முழுவதும் செப்டம்பர் 1 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இதுரி மாநிலத்தில் உள்ள புனியா மறைமாவட்டத்தில், கத்தோலிக்கப் பள்ளிகள் மாணவர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க நலவாழ்வு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றன. கை கழுவும் இடங்களை அதிகரித்தல், தொடுதல் இல்லா வெப்பமானிகளை வழங்குதல் மற்றும் உடல்நலம் பற்றி தினசரி தகவல்களைத் தெரிவிக்க நலவாழ்வு மையங்களை அமைத்தல் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், கிராமப்புறப் பள்ளிகளில் உபகரணங்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. பெற்றோர், பங்குகள், மறைமாவட்ட ஊடகங்கள் மற்றும் பெற்றோர் சங்கங்களுடன் இணைந்து திருஅவைத் தலைவர்கள் குடும்பங்களுக்கு நம்பிக்கையளிக்கவும் எபோலா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர்.
ஏறத்தாழ எட்டு ஆண்டுகால வன்முறை மற்றும் இடம்பெயர்வுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த நோய் பரவல் கல்வியை மீண்டும் மீண்டும் பாதித்துள்ளது. இடம்பெயர்ந்த குழந்தைகளை ஒன்று சேர்ப்பதற்கும், இடம்பெயர்ந்த சமூகங்களுக்கான பள்ளிகளை முடிந்தவரை தொடர்ந்து இயக்குவதற்கும் கத்தோலிக்கப் பள்ளிகள் உறுதியளித்துள்ளன.
காரித்தாஸ் அமைப்பு, மருத்துவச் சேவைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் முன்னெடுத்துள்ள எபோலா தடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் கடந்த ஆண்டு முதல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
புண்டிக்புக்யோ (Bundibugyo) வகைக்கு எதிரான தடுப்பூசி சோதனைகள் மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ள போதிலும், களத்தில் குறைந்த அளவு முன்னேற்றமே காணப்படுவதால் அதிகமான மனித உயிர்களை இழக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கும் மறைமாவட்ட அதிகாரிகள், வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் கூடுதல் உலகளாவிய உதவியைக் கோருகின்றனர்.
அரசு, உலக நலவாழ்வு அமைப்பு (WHO), யுனிசெஃப் (UNICEF) மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அருள்பணி விலி-ரோகாட்டியன் த்சாரிங்கா அவர்கள் வலியுறுத்தினார்.
இந்தச் சூழலில் எடுக்கப்படும் பயனுள்ள நடவடிக்கைகள் புனியாவின் இளைஞர்களுக்கான பாதுகாப்பான கல்வி ஆண்டிற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.