தேடுதல்

தென் கொரியாவின் சியோல் நகரில் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய நாள்களில் இடம்பெற்ற முதல் கன்பூசிய-கிறிஸ்தவ கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் தென் கொரியாவின் சியோல் நகரில் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய நாள்களில் இடம்பெற்ற முதல் கன்பூசிய-கிறிஸ்தவ கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் 

அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக கைகோர்த்த கன்பூசிய-கிறிஸ்தவ கருத்தரங்கு

தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற முதல் கன்பூசிய-கிறிஸ்தவ கருத்தரங்கில், அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுக்க இரு மரபுகளுக்கிடையேயான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த பங்கேற்பாளர்கள் உறுதியளித்தனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

தென் கொரியாவின் சியோல் நகரில் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய நாள்களில் இடம்பெற்ற முதல் கன்பூசிய-கிறிஸ்தவ கருத்தரங்கில் பங்கேற்றவர்கள், அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக கன்பூசியன் மற்றும் கிறிஸ்தவ மரபுகளுக்கிடையேயான நட்பையும் உரையாடலையும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளனர்.

பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறை, கொரியாவின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, கொரியாவின் கன்பூசியன் கழகம் மற்றும் சோகாங் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞர்கள், மதத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒன்று கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நம்பிக்கையை வளர்ப்பதே உண்மையான உரையாடலின் நோக்கம் என்பதை இக்கருத்தரங்கின் இறுதி அறிக்கை வாயிலாகப் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர். தனிமனித உருமாற்றம், அறநெறி சார்ந்த வாழ்வியல், இரக்கமுள்ள தலைமைப்பண்பு, விளிம்புநிலை மக்கள் மீதான கரிசனம், இயற்கை வளங்களைப் பேணுதல் மற்றும் பொது நலனுக்கான அர்ப்பணிப்பு போன்ற பொதுவான விழுமியங்களே நல்லிணக்கத்திற்கான ஒரே வழி என்பதை ஆணையாளர் தெளிவுபடுத்தியதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த உரையாடல்களில் சமூகப் பிளவு, தனிமை, கட்டாய இடம்பெயர்வு, சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் சீரழிவு, போர், பாகுபாடு மற்றும் செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்தும் பேசப்பட்டன. இந்தப் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகள் மட்டுமின்றி, அறநெறி சார்ந்த ஞானம், ஆன்மீக மதிப்புகள் மற்றும் மனித ஒற்றுமை ஆகியவை தேவை என்பதை பங்கேற்பாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆராய்ச்சி, கல்வி, இளைஞர்களின் ஈடுபாடு, உரையாடல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த அறநெறிப் பிரதிபலிப்பு ஆகியவற்றின் மூலம் கிறிஸ்தவ-கன்பூசியன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் இந்தக் கருத்தரங்கம் நிறைவடைந்தது.

ஒவ்வொரு மனிதரும் மாண்பு, அமைதி, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படவும் பங்கேற்பாளர்கள் உறுதியேற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஆகஸ்ட் 2026, 13:45