கொலம்பியா நிலநடுக்கம்: நம்பிக்கையுடன் மீண்டும் கட்டியெழுப்ப மனிசலெஸ் பேராயர் அழைப்பு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 10, திங்களன்று கொலம்பியாவைத் தாக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிகவும் கடுமையானது மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்று மனிசலெஸின் பேராயர் ஜோஸ் மிகுவல் கோம்ஸ் ரோட்ரிக்ஸ் அவர்கள் விவரித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
"இந்த நிலநடுக்கம் வீடுகளுக்குத் தீவிரமான சேதத்தை ஏற்படுத்தியதால், பல மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்" என்றும் "பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஆலயங்கள் மற்றும் திருஅவைக்குச் சொந்தமான கட்டிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன" என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.
புதிய கோதிக் (Neo-Gothic) கட்டிடக் கலைக்கு அடையாளமாகவும் அப்பகுதியின் சிறப்புமிக்க சின்னமாகவும் விளங்கும் மனிசலெஸ் மறைமாவட்டப் பெருங்கோயிலில் ஏற்பட்டுள்ள சேதம் மிக முக்கியமான இழப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் துணை கோபுரங்களில் ஒன்று முக்கியமான கட்டமைப்பின் மீது இடிந்து விழுந்தது. மேலும் வல்லுநர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்யும் வரை, சேதமடைந்த பகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு வங்கியின் மூலம் திருஅவை உடனடியாகப் பதிலளித்து வரும் அதே வேளையில் அங்குள்ள அமைப்புகளும் அவசர நன்கொடைகள் மற்றும் உதவிகளை வழங்கின. " இருப்பிடம் மற்றும் உணவு ஆகியவை மிக அவசியமான உடனடித் தேவைகள்" என்றும், "அதனைத் தொடர்ந்து அனைத்தையும் இழந்த குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் அவசியமாக உள்ளன" என்றும் பேராயர் கோம்ஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
தனது உடனிருப்பை வெளிப்படுத்திய திருத்தந்தை அவர்களின் செய்திக்கு நன்றி தெரிவித்த பேராயர் அவர்கள், "இது திருத்தந்தையின் தந்தைவழி நெருக்கம் மற்றும் ஊக்கத்தின் அடையாளமாக உணரப்பட்டது" என்றும் கூறியுள்ளார்.
பேரழிவு ஏற்பட்ட போதிலும், நம்பிக்கை மற்றும் உறுதிக்கான ஒரு செய்தியை வழங்கிய பேராயர் கோம்ஸ், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், இடிபாடுகளை அகற்றுவதற்கும், மேலும் வலுவாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் உள்ள அவசரத் தேவையையும் வலியுறுத்தினார்.
துன்பங்களுக்கு மத்தியிலும் இறைவனைத் தொடர்ந்து புகழவும் போற்றவும் மக்களை ஊக்குவித்து அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.