தேடுதல்

Aftermath of an earthquake in Cali

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணையும் கொலம்பிய திருத்தந்தை மறைத்தூதுக் கழகம்!

கொலம்பியாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளை ஆகஸ்ட் 10ஆம் தேதி தாக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல் செய்யவும் அவர்களுடன் ஒருமைப்பாட்டுடன் துணைநிற்கவும் கொலம்பியாவின் திருத்தந்தை மறைத்தூதுக் கழகங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 10, திங்களன்று மத்திய மற்றும் மேற்கு கொலம்பியாவை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து, கொலம்பியாவின் திருத்தந்தை மறைத்தூதுக் கழகம், பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் இறைவேண்டலிலும் ஒருமைப்பாட்டிலும் ஒன்றிணைந்திருக்குமாறு தேசிய மற்றும் உலகளாவிய மறைப்பணி வலைப்பின்னலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி சோகோவின் இஸ்ட்மினா-டாடோ மறைமாவட்டத்திலுள்ள சான் ஜோஸ் டெல் பால்மருக்கு அருகே அமைந்திருந்தது. பெரேரா, காலி, இஸ்ட்மினா, குய்ப்டோ, மனிசல்ஸ் மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகளுடன் பல கிராமப்புற சமூகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், பலரை இன்னும் காண்டடைய இயலவில்லை எனவும், மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பேரிடர் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், விமான நிலையங்கள், பொதுச் சேவைகள், ஆலயங்கள் மற்றும் பிற மதக் கட்டிடங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவில் உள்ள திருத்தந்தை மறைத்தூதுக் கழகத்தின் இயக்குநரான அருள்பணி சமீர் டி ஜீசஸ் கார்சியா வலென்சியா அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செவிசாய்ப்பதன் மூலமும், அவர்களுடன் துணை நிற்பதன் மூலமும், அவர்களுக்கு உதவுவதன் மூலமும் திருஅவை அவர்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறது என்று கூறியுள்ளார். துன்பங்களுக்கு மத்தியில் மறைப்பணி ஒன்றிப்பை வலுப்படுத்தவும், நம்பிக்கையை நிலைநிறுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் மறைமாவட்டத் தலைவர்களுடன் திருத்தந்தை மறைத்தூதுக் கழகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது .

பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையாக இருப்பதற்கும், இறைவேண்டல் மற்றும் உறுதியான ஒருமைப்பாட்டின் மூலம் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் கொலம்பியாவில் உள்ள திருஅவை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஆகஸ்ட் 2026, 13:01